Friday, August 05, 2011

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மீது சுவிஸ் போர்க் குற்ற விசாரணை: கொழும்பு பெரும் அதிர்ச்சி

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியும்தற்போதைய இராஜதந்திரியுமான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக போர்க் குற்றம் தொடர்பான முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அத்திணைக்களம் நேற்று அறிவித்தது.


மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிரான கிரிமினல் முறைப்பாட்டை சுவிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு தாம் கொண்டுவந்ததாக மனித உரிமைகளுக்காகப் போராடும் இரண்டு அமைப்புக்களான அச்சுறுத்தப்பட்ட மக்களுக்கான சமூகம் மற்றும் ட்ரையல் எனும் மனித உரிமைகளுக்கான குழுக்கள் தெரிவித்துள்ளன. ஜேர்மனிக்கான இலங்கையின் பிரதித் தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தற்போது பணியாற்றிவருகின்றார்.
ஜேர்மன் தலைநகர் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகமே சுவிட்ஸர்லாந்துடனான உறவுகளையும் கையாள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே போர்க் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் சுவிஸ் சட்டமா அதிபர் அலுவலகத்துக்கக் கிடைத்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவுத் தளபதியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸினால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது பெருமளவு போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான பெருமளவு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மேற்படி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இம்முறைப்பாடுகள் காரணமாக அவர் அடுத்த தடவை சுவிட்ஸர்லாந்துக்கு செல்லும்போது கைது செய்யப்பட்டு நீதிவிசாரணைக்குட்படுத்தப்படுவார் என அக்குழுக்கள் நம்பின்கை தெரிவித்தன. ஜகத் டயஸை வேண்டப்படாத நபர் என பிரகடனப்படுத்துமாறு சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சை அவ்வமைப்புகள் கோரியுள்ளன.
அவ்வமைச்சு ஏற்கெனவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன. இவ்விடயம் குறித்து சுவிஸ் வெளிவிவகார அமைச்சிடம் கேட்டபோது, இராஜதந்திர .ரகசியத்தன்மை காரணமாக, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை வெளியிட முடியாது
எனத் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து தான் அறிந்திருப்பதாகவும் இது குறித்து சுவிஸ் வெளிவிவகாரத் திணைக்களம் தீவிர கவனம் செலுத்துவதுடன் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதாகவும் அவ்வமைச்சு கூறியுள்ளது.

No comments:

Post a Comment