Saturday, August 06, 2011

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர்: இனி அதிகாரப்பகிர்வு தேவையில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளை அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டதால் இனிமேல் அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு என்று பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இறுதிப் போரின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்று தேவை என்று கேட்பது எமது ஆளுமையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைகிறது. இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு. பிரித்தானியர் விட்டுச் சென்ற சிறந்த நீதித்துறை எம்மிடம் இருக்கிறது. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத சக்தியை நாம் தோற்கடித்திருக்கிறோம்.

பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாமல் பல நாடுகள் திண்டாடி வருகின்ற போது, அதனை சாதித்த எம்மை, அனைத்துலக விசாரணையைக் கோருபவர்கள் நம்ப வேண்டும். இறைமையுள்ள ஒரு நாட்டுக்குள் எப்படி அனைத்துலக விசாரணை ஒன்றை முன்னெடுக்க முடியும்? அது நியாமற்றது.

அவ்வாறு விசாரணை நடத்தக் கோருபவர்களை அனைத்துலக சமூகம் என்று கூறுவது தவறான கருத்து. அனைத்துலக சமூகத்தில் உள்ள ஒரு சில நாடுகள் இதனைச் செய்யக் கூடும். ஆனால் மீதியாகவுள்ள மொத்த உலகமும் எங்களை ஆதரிக்கிறது.

ரஷ்யாவில் ஆரம்பித்து சீனா வரைக்கும், நிச்சயமாக இந்தியாவும் எங்களை ஆதரிக்கிறது. பாகிஸ்தான், அரபுநாடுகள், ஆபிரிக்க நாடுகள் என்று அனைத்தும் எங்களை ஆதரிக்கின்றன. இவைதான் அனைத்துலக சமூகம். ஒரு சிலர் மட்டும் தங்களை அனைத்துலக சமூகம் என்று கூறிக்கொள்ள முடியாது.

அத்தகைய ஒரு அனைத்துலக விசாரணையை இந்தியா தனது நாட்டுக்குள் அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எந்த ஒரு இறைமையுள்ள நாடும் அப்படி அனுமதிக்காது.

போரில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அந்த எண்ணிக்கை மிகச் சிறியது என்பதை என்னால் கூற முடியும். பெரும் படுகொலை என்று அதனை வகைப்படுத்த முடியாது. எனது கேள்வி என்னவென்றால், ஏன் எந்த ஒரு அனைத்துலக நிறுவனமும் எம்மைச் சந்தேகப்பட வேண்டும், ஏன் ஒரு இறைமையுள்ள அரசைச் சந்தேகிக்க வேண்டும் என்பது தான்.

அரசியல் தீர்வு பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. இந்தியாவின் ஆலோசனையுடன் 13வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது அது பற்றிப் புலிகளுடன் பேசப்பட்டது. அந்தத் திருத்தச் சட்ட்ம் வரையப்பட்ட போது இலங்கை அரசுக்கு அதில் எந்தப் பங்கும் இருக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு என்று வந்த போது நாம் எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்கத் தயாராக இருக்கவில்லை. இப்போது நானும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்கப் போவதில்லை. பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு தளர்வையும் நான் அனுமதிக்க மாட்டேன். ஏனெனில் அதனை நாம் செய்ய முடியாது. நாங்கள் தொடர்ந்தும் எமது பாதுகாப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்திக் கொண்டே செல்வோம்.

சண்டையிடுவதற்கு ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் இல்லை என்ற போதும், புலனாய்வுப் பணிகள் கண்காணிப்பு நடவடிக்கைகள், ஆயுதங்களை இலங்கைக்குள் எடுத்து வருவதைத் தடுப்பதற்கான பணிகள், கரையோரப் பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் இருப்பதால் பாதுகாப்பை நாம் ஒருபோதும் தளர்த்த மாட்டோம்.

இரு இனங்களும் இணைந்து வாழ்வதற்கு தற்போது இருக்கும் அரசமைப்பே போதுமானது. கலந்துரையாடல்கள் மூலம் இதையே தீர்வாக மக்களிடம் கொடுக்க வேண்டும். இப்போது புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டது. எனவே இப்போதிருப்பதை விட மேலான ஒன்றைச் செய்வதற்கான தேவை இருப்பதாக நான் கருதவில்லை.

இந்த அரசமைப்பு அதிகாரங்களை அடிமட்டம் வரைக்கும் வழங்குகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி இருக்கிறோம். விரைவில் மாகாணசபைத் தேர்தலையும் ஜனாதிபதி நடத்துவார். எனவே அதிகாரப்பகிர்வு என்ற ரீதியில் நாங்கள் போதியளவுக்கு ஏற்கனவே வழங்கி விட்டோம். இதைவிட மேலதிகமாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியது அவரது அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காகவாகும். உண்மையில் ஈழத் தமிழர்கள் மீது அவருக்கு அக்கறை இருந்தால் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் வந்து மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்படிப்பட்ட விடயங்கள் வரும் போது அவர்கள் மௌனமாகி விடுவார்கள். அப்போது இலங்கைத் தமிழர்களின் நலன்கள் குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு உண்மையான நிலவரத்தைப் புரிய வைக்க முயன்றிருக்கிறோம். அதற்காகவே அவருடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டது ஒரு சிறிய விடயம். இலங்கைக்குள் நாளாந்தம் நடக்கும் தாக்குதல்களுடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை. சாதாரணமானது. ஏனைய நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment