Monday, August 08, 2011

விடுதலை விதை விதைத்த எம் மண்ணில் விடலைகள் போடும் ஆட்டம்! இதற்காகவா இத்தனை தியாகங்கள்!! மன்னிக்க வேண்டும் மாவீரர்களே!!!

tt-kodumai125 (6).jpg - 85.99 Kbதமிழரின் விடுதலை என்ற ஒப்பற்ற இலட்சியத்தினை மூச்சாக வரித்து தமிழீழத்தின் காற்றோடு காற்றாகவும் கடலோடு கடலாகவும் மண்ணோடு மண்ணாகவும் வான்முகிலோடு முகிலாகவும் கலந்துவிட்ட மாவீரர்களது தியாகம் போற்றிப் பாடப்பட வேண்டிய நிலையில் அவமதிக்கப்படுவது வேதனையளிக்கின்றது.
தமிழர் தாயக பூமியானது தேசத்தின் காவலர்களது வெளிப்பாடு இல்லாத இன்றைய நிலையில் விடலைகளின் விளையாட்டுக் களமாக மாறியுள்ளதை என்னவென்று சொல்ல.



சிங்கள அரசு தமிழினத் துரோகிகள் துணைகொண்டு இருபதிற்கு மேற்பட்ட உலகநாடுகளின் படை பட்டாளங்களின் நேரடி மறைமுக உதவிகளுடன் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைத்துவிட்டு தமிழர்களின் கலை கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்க முயன்று வருகின்றது.
தமிழினத்தின் கலாச்சார பூமியாக இதுவரை விளங்கிவந்த யாழ்ப்பாண மண் இன்று தன்னிலை தவறி கலாச்சார சீரழிவு தலைவிரித்தாடும் நரக பூமியாகிவிட்டதனையே இந்த புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஒருபக்கம் தாராள மது புகைப் பயன்பாடு தமிழரின் சுவாசத்தை கரித்து வருகையில் விடலைகளின் விட்டேத்தி வாழ்க்கை ஈழத்தின் தெருக்களை நாறடித்து வருகின்றது. இளம் பராயத்து பெண்களாகட்டும் ஆண்களாகட்டும் பல பேருடனான உறவே தமது வாழ்வின் கௌரவ நிலை என்று கருதி தமிழினத்தின் ஆன்மாவை நடுநடுங்க வைத்துள்ளது.
போராளிக்கலைஞர்களும் தமிழீழப் பாடகர்களும் விடுதலைக்கானம் இசைத்த தெருக்கள் வீதிகள் மைதானங்கள் அனைத்தும் இன்று தென்பகுதி சிறுக்கிகளின் சின்னத்தனமான ஆட்டம் பாட்டத்தை கானச்சகிக்காது மண்ணுக்குள் தலைசாய்த்து விக்கித்து நிற்கின்றது.
இரவானால் பட்..பட்ட்… தட்..தட்ட்… என கதவுகள் அதிர அதைவிட இதயமும் படபடக்க உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அடுத்து நகரும் வினாடிகளை திகிலுடன் எதிர்நோக்கும் நிலையும் சந்திக்கு சந்தி குந்தியிருக்கும் அப்புகாமிகளுக்கு அடிபணிந்து அடையாள அட்டை காண்பித்து தடுமாற்றத்துடனே கடந்து செல்லும் நிலையும் சோதனை என்ற பெயரில் எம் சகோதரிகளின் அங்கங்களை தொட்டு சில்மிசம் செய்யும் லெகு பண்டாக்களின் அத்துமீறல்கள் தொடரக் கூடாது என்பதற்காகவும் தமது வாழ்வை முடித்து சரித்திரமாகிய மாவீரர்களது தியாகம் இப்படி அவமாணப்படுத்தப்படுகின்றதே என்று என்னுகையில் இந்த தறுதலைகளிற்காகவா நாடு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆதங்கம் மேலெழுகின்றது.
எந்தத் தலைமுறை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டி தம்முயிரை அர்பணித்து விடுதலைப் பாதையினை செப்பனிட்டார்களோ அந்தத் தலைமுறைதான் சிங்களத்தின் எண்ணத்தை செயல்வடிவமாக்கி மாவீரர்களின் தியாகத்தை அவமானப்படுத்தி தமிழினத்தை தலைகுனிய வைத்துள்ளார்கள் எனும் போது வேறு எப்படித்தான் நினைப்பது…?
பிச்சைக்காரர்களே இல்லாத பூமி இன்று பிச்சைப்பாத்திரம் ஏந்தும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் இளம் குடும்பத்தவர்களைக் காணவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளது. விபச்சாரிகள் நிறைந்த தெருக்களாக தமிழர் தாயகம் கிருமித் தொற்றிற்கு உள்ளாகியுள்ளது. நாட்டை நாளை ஆள வேண்டிய இளம் தலைமுறை போதைக்கு அடிமையாகி வீதிகளில் தள்ளாடி நிற்கின்றது.
இது ஒருபக்கம் என்றாள் இன்றும் உயிர்ப்புடன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் உயரிய இலட்சியத்துடன் களமாடிவரும் போராளிகளுக்கும் நிறைவாகும் வரை மறைவாக இரு என்ற காசி அண்ணாவின் வரிகளிற்கு உயிர் கொடுத்து அனைத்துலக சதி முயற்சிகளை முறியடித்து பூகோள அரசியல் மாற்றத்தை தனதாக்கி 194வது நாடாக சுதந்திர தமிழீழத்தை உருவக்க களமாடிவரும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கும் தோளோடு தோள்நின்று அனைத்துலக இராசதந்திரத் தளத்தில் தீரத்துடன் புலம்பெயர் உறவுகள் போராடி வருகின்றமை சற்று ஆறுதலான விடையமாகும்.
மண்ணின் விடுதலையினையும் தமிழினத்தின் சுதந்திர வாழ்வினையும் உறுதிப்படுத்துவதற்காக சிங்களத்தின் தடையுடைத்து படையழித்து வரலாறாகிப் போன மான மறவர்களான மாவீரர்களின் தியாகத்தை போற்றுவோம். எத்தடைவரினும் தகர்த்தெறிந்து மாவீரர் கனவை நனவாக்குவோம். அதுவரை இந்த விடலைகளின் விளையாட்டுக்களை மன்னிக்க வேண்டும் மாவீரர்களே!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ் (06-08-2011)

No comments:

Post a Comment