Friday, September 09, 2011

கூட்டமைப்பின் பிரேரணையை ரத்துச் செய்த தமிழர்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நேற்று நடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட யாழ்.நாவாந்துறை கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் தொடர்பான சபை ஒத்தி வைப்புவேளை பிரேரணை ரத்துச் செய்யப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தார்.


அவர் பிரேரணையை வாசிக்கத் தொடங்கியதும் திடீரெனக் குறுக்கீடு செய்த அரசின் பிரதம கொறடா தினேஷ் குணவர்த்தன நாவாந்துறை மர்ம மனிதன் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இந்தப் பிரேரணையை இங்கு கொண்டு வரமுடியாது என்று கூறினார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்தன. இந்தப் பிரேரணை நன்கு ஆராயப்பட்டே விவாதிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இது கொண்டு வரப்படவில்லை. ஆகவே, இதை விவாதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறினார்.

தகவல்கள் அனைத்தும் உடனே கிடைப்பதில்லை. இப்போதுதான் இந்தப் பிரேரணை பற்றிய தகவல்கள் கிடைத்தன. இதனால் இந்தப் பிரேரணையை விவாதத்திற்கு விட முடியாது என்று நாம் தீர்மானம் எடுத்துள்ளோம் என்று தினேஷ் குணவர்த்தன மீண்டும் கூறினார்.

தினேஷின் இந்தக் கூற்றுக்கு ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள். எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

கிறீஸ் மனிதனுக்குப் பயந்தே அரசு இந்தப் பிரேரணையை எதிர்க்கின்றது என்று கூறினர். அதற்கு ஐக்கிய தேசியக்கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பயந்து இந்தப் பிரேரணையை ஆதரிக்கின்றது என்று அரச அமைச்சர்கள் கூறினர்.

இந்தப் பிரேரணை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் இதை விவாதிப்பதற்கு அனுமதி வழங்கமுடியாது என்று அப்போது சபைக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்த குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார்  தீர்ப்பளித்தார்.

இதனால் இந்தப் பிரேரணை ரத்தானது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.

No comments:

Post a Comment