Tuesday, January 10, 2012

புலி சின்ன முத்திரைகள் ஒட்டப்பட்ட கடிதங்கள் முத்திரைகள் நீக்கப்பட்டு விநியோகிக்கப்படும்!

விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் கூடிய அஞ்சல் தலைகளுடன் வரும் கடிதங்கள் விடயத்தில், அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் விதிமுறைகளை மீறிச் செயற்படப் போவதாக கூறியிருந்த சிறிலங்கா, தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.
முன்னதாக, இத்தகைய அஞ்சல்களை தாம் விநியோகிக்க முடியாது என்றும், எனவே பிரான்சில் இருந்து இத்தகைய அஞ்சல் தலையுடன் அஞ்சல்களையும் பொதிகளையும் அனுப்ப வேண்டாம் என்று லா-போஸ்ட் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக சிறிலங்கா அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்தநிலையில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் இடம்பெற்ற அஞ்சல் தலையுடன் வரும் அஞ்சல்களை, அதிலுள்ள அஞ்சல்தலைகளை நீக்கிவிட்டு விநியோகிக்கப் போவதாக சிறிலங்காவின் அஞ்சல் மா அதிபர் நேற்று அறிவித்துள்ளார்.

"விடுதலைப் புலிகள் சார்பான அஞ்சல் தலைகளுடன் அஞ்சல்கள் சிறிலங்காவுக்கு அனுப்பப்படுமானால் அவை எங்கிருந்து வருகின்றன, யாருக்கு சென்று சேருகின்றன என்ற விபரங்களை பதிவு செய்யுமாறு தாம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சிறிலங்கா அஞ்சல் மாஅதிபர் எம்.கே.பி திசநாயக்க கூறியுள்ளார்.
அதன் பின்னர் குறிப்பிட்ட அஞ்சல் தலைகளை நீக்கிவிட்டு பொதிகளை உரிய இடத்துக்கு கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இறைமையுள்ள நாடு என்ற ரீதியில், எந்தவொரு அனைத்துலக சட்ட ஒழுங்குவிதியையும் புறந்தள்ளி விட்டு, எமது இறைமைக்கு ஏற்ற வகையில் தான் செயற்பட வேண்டும் என்பது அரசின் கொள்கை என்ற அடிப்படையில் அஞ்சல் திணைக்களம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment