Monday, January 16, 2012

மகிந்தவுக்கு கருணை காட்டியது ஒபாமா நிர்வாகம் – போர்க்குற்ற வழக்கில் இருந்து தப்புகிறார்

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக ஒபாமா அமெரிக்க அரசாங்கம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

காசிப்பிள்ளை மனோகரன் மற்றும் இருவரால் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க்குற்ற வழக்கிலேயே, சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதென ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நீதித் திணைக்கள சட்ட ஆலோசகர் ஹரோல்ட் ஹோ இந்த போர்க்குற்ற வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் கொலம்பியா மாவட்ட நீதிபதி கொலீன் கொல்லர் கொட்டேலி, இந்த விவகாரத்தில் இராஜாங்கத் திணைக்களத்தின் பரிந்துரைகளை ஜனவரி 13ம் நாளுக்குள் தெரியப்படுத்துமாறு கேட்டிருந்தார்.

இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று அமெரிக்க நீதித் நீதித் திணைக்களத்தின் உதவி சட்டமா அதிபர் ரொனி வெஸ்ட் மற்றும் பிரதி கிளை பணிப்பாளர் வின்ஸ் எம்.காலர்வே ஆகியோர் சிறிலங்கா அதிபருக்குள்ள இராஜதந்திர சிறப்புரிமை குறித்த பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து நீதிபதி கொட்டேலி, இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு சிறிலங்கா அதிபருக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதற்கிடையே, சிறிலங்கா அதிபரை போர்க்குற்ற வழக்கில் இருந்து காப்பாற்றும் வகையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நடந்து கொண்டுள்ளது குறித்த தமிழர் இனப்படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.
puthinappalakai.com

No comments:

Post a Comment