Friday, January 13, 2012

இலங்கைக்கு படையெடுக்கும் அமெரிக்கப் படை உயரதிகாரிகள்!


அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவின் நான்கு உயர்நிலை அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அரசதரப்பையும், குடியியல் சமூகப் பிரதிநிதிகளையும், அரசியல் தலைவர்களையும், வர்த்தகத் துறையினரையும் சந்தித்துப் பேசவே அமெரிக்க அதிகாரிகள் நால்வரும் கொழும்பு வரவுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தந்திரோபாய கற்கைகளுக்கான அண்மைய கிழக்கு தெற்காசிய நிலையத்தைச் சேர்ந்த தூதுவர் ஜேம்ஸ் ஏ லறோக்கோ, ஜனவரி 15ம் நாள் தொடக்கம் 19ம் நாள் வரை சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
35 ஆண்டுகளாக இராஜதந்திரியாக இருந்த இவர் இந்த நிலையத்தில் 2009 ஓகஸ்ட் மாதம் இணைந்து கொண்டவர்.
அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் ஆபிரிக்க, மத்தியகிழக்கு மற்றும் தெற்காசியாவுக்கான பிரதி உதவிச்செயலர் ஹொலி வினெயாட் ஜனவரி 17ம் நாள் தொடக்கம் 19ம் நாள் வரை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு,மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலர் கலாநிதி அலிசா அரெஸ் எதிர்வரும் 18ம் நாள் தொடக்கம் 24ம் நாள் வரை சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் ஜனநாயகம், மனிதஉரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலர் தொமஸ் ஓ மெலியா எதிர்வரும் 20ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார்.
ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகள் விவகாரத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடக்கம் இராஜாங்கத் திணைக்களத்தில் பணியாற்றி வருகிறார் என்று அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு அடுத்தடுத்து நான்கு முக்கிய அமெரிக்க அதிகாரிகள் குறுகிய காலப்பகுதிக்குள் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

No comments:

Post a Comment