இப்போது அரசதரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு
பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப்
போராட்டத்துக்கும் தயாராகின்றனர் என்பதே. பாதுகாப்புச்செயலர் கோத்தாபய
ராஜபக்ஷ அவ்வப்போது கூறிவந்த இந்த விடயத்தை இப்போது எல்லா அமைச்சர்களும்
வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
முன்னர் ஜே.வி.பி பலவீனப்படுவதை விரும்பிய
அரசாங்கம் இப்போது அதனை விரும்பவில்லை. முன்னதாக ஜே.வி.பி.யை உடைப்பதற்காக
விமல் வீரவன்ஷவையும், நந்தன குணதிலகவையும் பயன்படுத்திக் கொண்டது
அரசாங்கம். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பிளவு அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியைக்
கொடுக்கும் ஒன்றாக அமையவில்லை.
இரண்டாவது வகையினர், ஜே.வி.பி.யின்
ஆயுதக்கிளர்ச்சிகளில் தீவிரமாக இருந்தவர்களும், தீவிரப் போக்குடையவர்களும்.
பிரேம்குமார் குணரட்னம் மற்றும் அவருடன் இணைந்து கொண்டுள்ளவர்களும் இந்த
வகையினர். பிரேம்குமார் குணரட்னம் பல்லேகல இராணுவ மூகாம் தாக்குதலில் தொடர்
புடையவர் என்று கைது செய்யப்பட்டு, தடுப்பில் இருந்தபோது தப்பிச்
சென்றவர்.
புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம்
என்ற நம்பிக்கை கொண்ட இவர்கள் தனியே பிரிந்து சென்றிருப்பது தான்
அரசுக்குக் கவலை. அதிலும் இன்னொரு அச்சம் அரசுக்கு உள்ளது. லலித்குமாரும்,
அவரது நண்பர் குகனும் யாழ்ப்பாணத்தில் காணாமற்போய் இன்னமும்
கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களை அரசபடையினரே கடத்தியதாக
குற்றம்சாட்டப்படுகிறது.
ஆனால் அதைப் படையினர் மறுத்துள்ளனர்
ஜே.வி.பி.யின் மாற்று அணியினர் வடக்கில் உள்ள புலிகளுடன் கைகோர்த்துக்
கொண்டு ஆயுதப் போராட்டத்தில் இறங்கலாம் என்ற அச்சம் அரசுக்கு இருந்து
கொண்டிருக்கிறது.அத்துடன் பிறேம்குமார் குணரட்னம் அணியினருக்கு
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களே நிதியுதவி செய்வதாகவும்
அரசாங்கம் குற்றம்சாட்டி வருகிறது. ஜே.வி.பி.யில் இருந்தபோதே இந்தத்
தரப்பினர் வடக்கில் தீவிரமாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி
விட்டனர். அவர்களில் உதுல் பிரேமரட்ண போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
தமக்குப் பின்னால், புலிகள் இருப்பதாக
கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அந்தக் குழுவின் தேசிய அமைப்பாளரான
துமிந்த நாகவ, வரும் காலத்தில் பசில் ராஜபக்ஷ, நிமால் சிறிபால டி சில்வா
போன்றவர்களுக்குப் பின்னாலும் புலிகள் இருப்பதாக அரசாங்கம் கூறக்கூடும்
என்று கிண்டலடித்துள்ளார். இலங்கையில் புலிகள் இயக்கம் வேரோடு
பிடுங்கியெறியப்பட்டு விட்டபோதும், அவர்களை வைத்து அரசியல் நடத்துவதை
மட்டும் அரசாங்கம் கைவிடவில்லை. எதற்கெடுத்தாலும் புலிகளை வைத்துப்
பூச்சாண்டி காட்டுவது அரசாங்கத்தின் வழக்கமாகி விட்டது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் குறைந்து
போயிருந்த இந்தப் பழக்கம் இப்போது மீண்டும் அதிகக்கத் தொடங்கி
விட்டது.அமைச்சர்கள் எல்லோரும் இப்போது இன்னொரு ஆயுதப்போர் தெற்கிலும்
வடக்கிலும் உருவாகலாம் என்பது போல எச்சக்கின்றனர்.ஜே.வி.பி.யில் இருந்து
பிரிந்து சென்றோராலும், வெளிநாடுகளிலும், வடக்கில் படையினரிடம் சிக்காமல்
தப்பியுள்ள புலிகளாலும் ஆபத்து ஏற்படலாம் என்கிறது அரசாங்கம்.
தொடர்ச்சியாக அரசாங்கம் கூறிவரும் இந்தக்
கருத்துகளை முற்றுழுதாக புறமொதுக்கி விட முடியாது. வலுவான புலனாய்வுக்
கட்டமைப்பு ஒன்றைக் கொண்டுள்ள அரசாங்கம் இவ்வாறு எச்சரிப்பது ஆழமாக
ஆராயப்பட வேண்டியது. மக்கள் போராட்டக் குழு என்ற பெயரில் செயற்படும்
ஜே.வி.பி மாற்றுக் குழுவினர் மீது சந்தேகப்படும் அரசாங்கம், இதுவரையில்
அவர்களில் யாரையும் பிடித்து விசாரிக்கவில்லை. தலைமறைவாக உள்ள பிறேம்குமார்
குணரட்னத்தை மட்டுமே அதிகாரபூர்வமற்ற வகையில் தேடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இவர்கள் ஆயுதப் போராட் டத்துக்குத் திட்டமிடுவதாக அரசாங்கம்
கூறுகிறது.
குறிப்பாக, அண்மைக்காலமாக பல்கலைக்கழக
மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள்
பல்கலைக்கழகங்களில் இருந்து தான் தொடங்குவது வழக்கம். எனவே இந்த
இரண்டுக்கும் முடிச்சுப் போட்டு ஜே.வி.பி.யின் மூன்றாவது கிளர்ச்சி பற்றி
கணக்குப் போடுகிறது அரசாங்கம்.
அதேவேளை வெளிநாடுகளில் அண்மையில் புலிகள்
சார்ந்த சில நகர்வுகள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக அமைந்துள்ளது.
இந்தநிலையில் தான் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டம் பற்றிய அரசு அச்சம்
வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து தெற்கிலும் வடக்கிலும் ஆயுதப் போராட்டங்கள்
முளை கொள்கின்றன என்று அரசாங்கம் எச்சரிக்கிறது.இது உண்மையாகவும்
இருக்கலாம். ஏதேனும் தந்திரோபாய நோக்கம் கொண்டதாகவும் இருக்கலாம். ஒரு
விடயம் மட்டும் அரசுக்குப் புரிந்துள்ளது போலுள்ளது.
அதாவது தெற்கிலும் வடக்கிலும்
ஆயுதப்போராட்டங்களை முறியடித்த போதும் அதற்கான அடிப்படைக் காரணங்களை
கண்டறிந்து தீர்வு வழங்கவில்லை என்பதே அது.ஒன்றுக்கு இரண்டு ஆயுதப்
போராட்டங்களில், பெரும் அழிவுகளுடன் தோல்வியடைந்த போதும் ஜே.வி.பி சார்ந்த
அணியினர் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகின்றனர் என்றால், அங்கே
இருந்த தவறு திருத்திக் கொள்ளப்படவில்லை என்றே அர்த்தம்.
ஆயுதப்போராட்டத்தை அரசாங்கம் பயங்கரவாதச்
செயலாக முத்திரை குத்திக் கொண்டாலும், அதற்குள்ள தார்மீக நியாயங்கள் தான்
அதற்குக் காரணம் என்பதை ஏற்றேயாக வேண்டும். புலிகள் இயக்கமோ அல்லது
ஜே.வி.பி.யோ அல்லது வேறேந்த இயக்கமோ ஆட்களைக் கொன்று சொத்துக்களை அழித்து
இன்பம் காண வேண்டும் என்று ஆயுதப் போராட்டத்தை நடத்தவில்லை. அப்படி
உருவாக்கப்பட்டிருந்தால், புலிகளாலோ, ஜே.வி.பி.யாலோ பெரியளவில் மக்கள்
ஆதரவைப் பெற்றிருக்க முடியாது.
இரண்டு ஆயுதப் போராட்டங்களுக்கும்
அடிப்படைக் காரணங்கள் இருந்தன. தமிழர்கள் இன ரீதியாக, மொழி ரீதியாக அடக்கி
ஒடுக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் தான் புலிகள்
இயக்கம் தோற்றம் பெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க
கடந்தவாரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது இதனை ஏற்றுக்
கொண்டிருந்தார்.
அதுபோலவே தெற்கில் ஜே.வி.பி.யும் ஆட்சி
முறைச் சீர்கேடுகளாலேயே உருவாக்கம் பெற்றது. ஜே.வி.பி.யின் ஆயுதப்
போராட்டம் இரண்டு முறை இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டது. ஆனால்,
புலிகளை அழிக்க அரசாங்கம் 30 ஆண்டுகாலம் போரிட வேண்டியிருந்தது. ஆக, இரண்டு
முக்கியமான அமைப்புகளின் மூன்று ஆயுதப்போராட்டங்களை அடக்கிய அரசாங்கமாக
இலங்கை அரசு விளங்குகிறது.
இந்த வகையில் இலங்கை அரசினதும்
படைகளினதும் திறனை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஆனால்,
அழிக்கப்பட்ட இந்த இரண்டு ஆயுதப் போராட்டங்களும் மீண்டும் முளை கொள்வது
உண்மையோ இல்லையோ, அப்படியானதொரு கருத்தை அரசாங்கம் முன்வைக்கிறது என்றால்,
இந்த ஆயுதப் போராட்டங்களின் மீது குறையோ தவறோ இல்லை. தவறுகளை தனியே ஆயுதப்
போராட்டங்களை நடத்தியவர்கள் மீது சுமத்தி தப்பித்து விட முடியாது.
அந்த ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றதற்கான
காரணங்களை ஆராய்ந்து, அதற்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஜே.வி.பியின்
கிளர்ச்சி தோற்கடிக் கப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் தான்,
மீண்டும் அதுபற்றிய அச்சம் வந்துள்ளது. ஆனால்,விடுதலைப் புலிகள்
தோற்கடிக்கப்பட்ட மூன்றேயாண்டுகளில் இப்படியான அச்சம் வந்துள்ளது.
இதிலிருந்து, ஆயுதப்போராட்டங்களைப்
படைபலத்தின் மூலம் அழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்த அரசாங்கம், அந்த ஆயுதப்
போராட்டங்களுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டிறிந்து அவற்றுக்குத் தீர்வு
காணத் தவறிவிட்டது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இது அரசுக்குப்
புரிந்திருக்கிறது, அதனால் தான் மீண்டும் ஆயுதப்போராட்டம் முளைகொள்ளுமோ
என்று மிரள்கிறது. எந்தவொரு ஆயுதப்போராட்டத்துக்கும் ஆயுதவழியில் தீர்வு
காண முடியாது. அதற்கான அடிப்படைக் காரணங்களுக்கு தீர்வு காணவேண்டும்.
அப்படித் தீர்வு காணத்தவறினால்,
குறிக்கப்பட்ட கால இடைவெளிக்குள் மீண்டும் அதே ஆயுதவழிப் போராட்டம்
தலைதூக்கும் என்பதே உலக வரலாறு. இந்தப் பாடத்தை அமெரிக்கா அடிக்கடி
படிப்பித்தாலும், அது இலங்கை அரசின் தலைக்குள் ஏனோ ஏறுவதாகத் தெரியவில்லை.
சுபத்ரா
நன்றி – வீரகேசரி
நன்றி – வீரகேசரி
No comments:
Post a Comment