போர்கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஐந்து படகுகளை சுற்றிவளைத்து மீனவர்கள் தோமஸ், மெல்டன், தர்மஸ், முருகேசன், ரமேஷ், சீனிவாசன், ரமேஷ்குமார், கணேசன், பாலமுருகன், முனியசாமி, யோவான், ஹில்டன், செல்சியா, ஜோசப், மில்லர், ஜான்போஸ், சகாயம், லதிசன், சிமியோன், சந்திரபோஸ், புல்டஸ், ஜேக்கப் ஆகிய 22 மீனவர்களை படகுடன் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று நேற்று மாலைவரை விசாரணை செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை ஐந்து முறை மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதும் பின் இரண்டு தினங்கள் விசாரணை பெயரில் வைத்திருந்து விடுவதுமாக உள்ளனர். தொடர்ந்து இதுபோன்று இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டுவதும், பிடித்து சென்று பொய் வழக்கு போடுவதுமாக உள்ளதால் மீனவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.
சேசு(தமிழக கடலோர விசைபடகு சங்க மாவட்ட செயலாளர்) : 22 மீனவர்களை கைது செய்து கொண்டு சென்றது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக போராடி கொண்டு இருக்கிறோம். கல்லால் அடிப்பது, விரட்டியடிப்பது போன்ற பல கொடுமைகளை தாங்கி கொண்டு இருக்கிறோம். பல கோடி அன்னிய செலவாணியை ஈட்டு தரும் மீனவர்களுக்கு மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்து பிரச்னைக்கு தீர்வு காண முன்வரவில்லை. இலங்கையில் விடுதலை புலிகள் பிரச்னைக்கே தீர்வு கண்டுள்ள நிலையில், மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணாமல் இழுத்தடித்து வருகின்றனர். இரு நாட்டு மீனவர்களுடனும் பேசி சுமூக உறவு ஏற்படுத்த வேண்டும்.
போஸ் (தமிழக கடலோர விசைபடகு மீனவர் நலசங்க மாநில செயலாளர்) : மீனவர்கள் பிரச்னை தொடர்ந்து நடக்கிறது. இதற்கு முக்கிய காரணமே தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை இங்குள்ள மீனவர்கள் சிலர் பயன்படுத்துவதால்தான். இலங்கை மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இரட்டைமடி வலையை நிறுத்தியபின் தீர்வு காண்போம் என்கின்றனர். தடைசெய்யப்பட்ட வலைகளால் மீன்பிடி தொழில் செய்பவர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு மீனவர் பிரச்னையில் சரியான கவனம் செலுத்தவில்லை. நிரந்தர தீர்வுக்கு இருநாட்டு மீனவர்களும் தடையின்றி மீன்பிடிக்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment