Sunday, February 26, 2012

ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 25 - 30 நாடுகள் ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.
47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.

அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன.
இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்க அல்லது தென்னமெரிக்க நாடு ஒன்றே அதனைக் கொண்டு வரும் என்று இப்போது தெரிவிக்கப்படுகிறது.
ஆபிரிக்க நாடுகள் இரண்டு மற்றும் மெக்ஸிக்கோ உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகள் இரண்டு மற்றும் பெல்ஜியம் ஆகியன ஐந்து நாடுகளில் ஒன்று அல்லது ஐந்தும் கூட்டாகப் பிரேரணையை முன்வைக்கலாம் என்று கூறப்படுகின்றது.
பிரேரணை அனேகமாக நிறைவேறிவிடும் என்ற நிலையில், அதிலிருந்து தப்ப இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரத்தை விவாதிக்க வேண்டாம் என்றும் பதிலாக ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தினதும் மனித உரிமைகள் நிலையை மீளாய்வு செய்யும் கூட்டத் தொடர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறுகையில் இலங்கை விவகாரத்தையும் விவாதிக்கலாம் என்றும் ஜெனிவாவில் உள்ள இலங்கைக் குழு கேட்டுள்ளது.
இலங்கையின் இந்தக் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்று ஐ.நா. மனித உரிமைகள் சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.
[ ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2012, 04:50.42 AM GMT ]
source_tamilwin

No comments:

Post a Comment