Sunday, February 26, 2012

இறுதிப்போரில் 8 ஆயிரம் பேர் கொலை: இலங்கை தகவல்

கொழும்பு, பிப்.25: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் ஏறக்குறைய 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு சனிக்கிழமை தெரிவித்தது. 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இறுதிப்போரில் ஈடுபட்டது இலங்கை ராணுவம். நாட்டின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற இந்த யுத்தத்தில் 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பிரிவின் அறிவிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் படுகொலைகள் விவரிக்க இயலாத சூழ்நிலையில் நடைபெற்றதாகவும், இதே காலகட்டத்தில் 2523 பேர் இயற்கையான முறையில் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஏறக்குறைய 4 ஆயிரத்து 156 பேரைக் காணவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படுகொலைகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர், பொதுமக்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் அறிக்கையில் பிரித்துக் காட்டப்படவில்லை. இலங்கை அரசு வெளியிட்டுள்ள இறப்பு எண்ணிக்கை, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வெளியிட்டுள்ள இறப்பு எண்ணிக்கைகளைவிட மிகக் குறைவானதாகும். சர்வதேச அமைப்புகள் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளன. மேலும் 2005 முதல் 2009 வரையான காலகட்டங்களில் ஏறக்குறைய 22 ஆயிரத்து 329 பேர் நாட்டின் வடக்குப் பகுதியில் இறந்துள்ளதாகவும் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரை 2006-ம் ஆண்டு மத்தியில் தொடங்கி 2009-ம் ஆண்டு மே மாதம் வரை இலங்கை அரசு நடத்தியது. ராணுவத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறப்பு எண்ணிக்கை குறித்து சர்வதேச அமைப்புகள் வெளியிடும் புள்ளிவிவரங்களை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இறப்பு விவரங்களையே வெளியிடும். 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்-கி-மூன் இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைத்தார். பொதுச்செயலாளர் அமைத்த கமிஷன் ஏறக்குறைய 40 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தது. அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இலங்கையின் வடக்குப் பகுதியில் ஏறக்குறைய 10 லட்சம் பேர் வசித்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 9 லட்சத்து 97 ஆயிரத்து 754 பேரே வசித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு 1981-ம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக எடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஆளுகையில் இருந்த முக்கிய நகரங்களான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் வசித்து வந்ததாகத் தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் மட்டும் 5 லட்சத்து 67 ஆயிரத்து 229 பேர் வசித்து வந்துள்ளனர்.

No comments:

Post a Comment