Sunday, February 26, 2012

புலிகள் மீதான தடையை நீக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: சீமான்

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்குவதற்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழம் என்பது இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் உரிய தேசம் என்றுதான் விடுதலைப்புலிகள் பிரகடனம் செய்தனர். அந்த இயக்கத்தை அழித்து தமிழர்களை அடிமைப்படுத்தவே இந்திய அரசின் ஆதரவுடன் தமிழர்கள் மீது இன அழிப்பு போரை ராஜபக்சே அரசு தொடுத்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்தொழித்துவிட்டதாகவும் அறிவித்தது.

தமிழர்களுக்கு இருந்த ஒரே பாதுகாப்பும் இந்திய அரசின் ஆதரவுடன் அழிக்கப்பட்டதால் இன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்படும் அளவிற்கு சீனா அங்கு அழுத்தமாக காலை ஊன்றிவிட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான இந்த தடையின் காரணமாகவே இலங்கை தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர்.

உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், எதிர்காலத்தை தேடிக்கொள்ளவும் எந்த நாட்டிற்கு அகதிகளாக சென்றாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இந்த அவல நிலை ஒழிய வேண்டுமானால் விடுதலைப்புலிகளின் மீதான தடை அகற்றப்பட வேண்டும். விடுதலை புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுமாறு மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என்று அதில் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment