Monday, March 19, 2012

18.3.2012 சென்னை மெரினா கடற்கரையில் சர்வ தேசத்திடம் நீதி கேட்டு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்

பன்னாட்டு நீதி மன்றத்தில்
இராசபட்சே, மன்மோகன் சிங், சோனியகாந்தி
மூவரும் நிறுத்தப்பட வேண்டும்
சென்னை கடற்கரையில் மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தக் கூட்டத்தில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி தலைவர்
தோழர் பெ.மணியரசன் உரை
“பன்னாட்டு நீதிமன்றத்தில் இராசபட்சேவை மட்டும் தனித்து நிறுத்தமுடியாது. இராசபட்சேவின் வலதுபக்கம் மன்மோகன் சிங்கும், இடது பக்கம் சோனியா காந்தியும் நிறுத்தப்பட வேண்டும்.

ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலை போர்க்குற்றத்தில் மன்மோகன் சிங்கிற்கும், சோனியா காந்திக்கும் பங்கு இருக்கிறது. இவர்கள் இருவரின் கைகள் தமிழர்களின் இரத்தத்தில் நனைந்தவை. இனப்படுகொலை செய்த இந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
நிரபராதி தன் கணவனை திருட்டுப்பட்டம் சூட்டிக் கொன்ற பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டுப் போராடினாள் கண்ணகி. தன் குற்றத்தை உணர்ந்த பாண்டிய மன்னன் தான் அரசன் இல்லை. தானே குற்றத்தை உணர்ந்து இறந்து போனான் அவன் தமிழன். பாண்டியன் தான் செய்தது தவறு என்றால் அதற்குத் தண்டனை பெற வேண்டும் என்று உணர்வுடையவன். தவறு இழைத்த மன்னன் இறந்த பிறகும் ஆத்திரம் தனியாத கண்ணகி மதுரைப் பட்டணத்தை எரித்தாள். அந்த கண்ணகி பிறந்த தமிழினத்தில் பிறந்த நாம் தன் இனத்தை ஈழத்தில் அழிக்கத் துணை போன ஆட்சியாளர்களை டெல்லிப் பட்டணத்தை எரித்திருக்க வேண்டும். அதை நாம் செய்ய வில்லை. இப்போதும் நாம் நீதிதான் கேட்கிறோம்.
இலங்கையில் இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களை தண்டிக்க ஒரு சர்வதேச குழு அமைக்க வலியுறுத்தி போராடுகிறோம். ஆனால் இந்தியா நமது கோரிக்கையை ஏற்கமறுக்கிறது. அமெரிக்க இப்போது கோரிக்கையாக முன் வைத்துள்ள தீர்மானத்தினால் நமக்கு நீதி கிடைக்காது. தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும். அடுத்து, ஈழத்தமிழர்கள் சிங்களர்களோடு வாழ்வதற்கு விரும்புகிறார்களா? தனி நாடு அமைத்துக்கொள்ள விரும்புகிறார்களா? என்பதை ஐ.நா. மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையை முன்வைத்து நாம் கூடியிருக்கிறோம். இக்கூட்டத்தை நான் தொடங்கி வைப்பத்தில் பெருமையடைகிறேன். என்று தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.
18.3.2012 மாலை சென்னை, மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே மே17 இயக்கம் ஒருங்கிணைத்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழின உணர்வாளர்களும், பொதுமக்களும் ஒன்று திரண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர், மல்லை சத்யா, ம.தி.மு.க தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், தமிழர் வாழ்வுரிமை கட்சி பேராசிரியர் தீரன், கவிஞர் தாமரை, ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்ட பலவேறு தமிழின உணர்வாளர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மே 17 இயக்கம் தோழர் திருமுருகன் உரையாற்றினர். காவல் அனுமதியின்றி ஆயிரக்கணக்கில் குழுமியக் கூட்டம் கண்ணகி சிலையிலிருந்து களங்கரை விளக்கு வரை முழக்கமிட்டுக்கொண்டே பேரணியாக சென்றது.

No comments:

Post a Comment