Friday, March 16, 2012

சனல்4 வின் இரண்டாம் பாகம்! விசாரணைக்கு அழைப்பு விடும் பிரித்தானியா!!

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீற்ல்கள் தொடர்பில் நம்பகமானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.


சனல் 4 தொலைக்காட்சியினால் தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்ற தலைப்பில் வெளியான இலங்கையின் கொலைக்களம் பாகம் இரண்டு வெளியாகி பின்னரே பிரித்தானியா இந்த அழைப்பை நேற்று விடுத்துள்ளது.

கொமன்வெல்த் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், அலிஸ்ரெயர் பேர்ட் இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

“சிறிலங்காவில் இடம்பெற்ற மோசமான மீறல்கள் பற்றிய விசாரணைக்கு ஆதரவாக சனல் 4 மீண்டும் முக்கியமான சாட்சியங்களை அனைத்துலக கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.

போர் முடிவுக்கு வந்தபின்னர், இருதரப்பினராலும் போரின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்துலக சமூகம் அழைப்பு விடுத்தது.

அந்த விசாரணைகளுக்கான தேவையை சனல் 4 ஆவணப்படம் மீளவும் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசின் பகிரங்க அறிவிப்புகள், இறுதியான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் சிறிலங்கா அடைய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஆனால் இதற்கு, கடந்தகாலம் குறித்து முழுமையானதும், நேர்மையானதுமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

நீதி, நல்லிணக்கம் மற்றும் அரசியல் முன்னேற்றங்களை உறுதி செய்யும் இந்த நகர்வுகளில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும்.

இதனால் தான் சிறிலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை ஊக்குவிக்கவும், பொறுப்புக்கூறுதலை உறுதிப்படுத்தவும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும்.“ என்றும் அலிஸ்ரெயர் பேர்ட் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment