Sunday, March 18, 2012

பாரிசில் அமெரிக்க தூதரகம் அருகாமையில் ஒன்றுகூடல்!


64 வருடங்கள் ஒரு இனம் தனது மண்ணில்உலகத்தில் வாழும் எல்லா இன மக்களையும் போல தங்களும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம் சிங்கள ஆக்கிரமிப்பு அரசால் பல இனச்சுத்திகரிப்புக்கு ஆட்பட்டு போராட்டத்தின் உச்சகட்டத்தில் ஒரு இனப்படுகொலையாக மாற்றம் அடைந்து, 40,000 மக்கள் கொல்லப்பட்டும், பல்லாயிரக்ணக்கான பெண்கள் விதவைகள் ஆகியும் பல்லாயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகள் அநாதை ஆகியும், பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், சிறுவர், பெரியவர்கள் ஊனம் உற்றவர்கள் ஆகியும்,146,679 தமிழர்களை பற்றிய விபரங்கள் தெரியாது இருக்கும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம காரியதரிசி திரு பான் கி மூன் யின் வேண்டுகோளுக்கு அமைய உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை குழுவின் பரிந்துரைக்கு அமைய " சிறி லங்காவில் சர்வதேச சட்டங்களை மீறி போர் குற்றமும் மனித நேயத்திற்கு எதிரான குற்றமும் நடைபெற்று இருக்கிறது- சர்வதேச விசாரணை அவசியம் என்று தமது அறிக்கையில் கூறி இருக்கும் நிலையில், ஆங்கில தொலைக்காட்சி சேனல் 4, சிறி லங்காவின் கொலைகளங்கள் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு இந்த உலகத்தின் சுயநலங்களை தட்டி எழுப்பிய போது சர்வதேச சுயாதின விசாரணை வேண்டும் என்று சில நாடுகளும் பல மனித நேய அமைப்புகளும் சர்வதேச அளவில் கூறிய நிலையில் குற்றவாளி நாடாகிய சிறி லங்கா இது ஒரு உள்நாட்டு பிரச்சனை என்று கூறி "கற்று அறிந்த பாடங்கள்- நல்லிணக்க ஆணைகுழு" என்ற கமிசன் ஒன்றை உருவாக்கி அதில் சில பரிந்துரைகளை முன்வைத்து விட்டு, மறுபகுதியில் சிறி லங்கா ராணுவம் தமிழ் மக்களை பாதுகாக்கவே போராடினார்கள் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபையின் 19 ஆவது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்மாகி இந்த முறைக்கான அமர்வில் சிறி லங்காவின் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய ஆய்வுகள் பலதரப்பிலும் பேசப்பட்டது.
எமது சகோதரர் மூவர் ஐரோப்பிய யூனியன் முன் ஆரம்பித்து கடும் குளிரிலும் மழையிலும் தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று ஆரம்பித்த நடைபயணம் மார்ச் 5ஆம் திகதி ஜெனிவாவில் தமிழருக்கு நீதி வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழர்கள் நாம் பல்லாயிரக்ணக்கான கூடி ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளுக்கு ஈழத் தமிழர்களின் விருப்புகளை தெரிவித்தோம்.
சிறி லங்காவில் நடைபெற்ற படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும், சிறி லங்காவில் கடைசி ஆறு மாதங்கள் மட்டும் தமிழர்கள் படுகொலைகள் செய்யப்படவில்லை சிறி லங்கா சுதந்திரம் அடைத்த நாளில் இருந்து இன்று வரை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்- 64 வருடங்களாக சிறி லங்காவில் ஒரு இன மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிராக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்பதை தமிழர்கள் ஆகிய நாமும் எமது அரசியல் பிரதிநிதிகளும் வலியுறுத்த வேண்டும்.
இன்று அமெரிக்க, சிறி லங்கா தமது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வடமாகாணத்தில் நடைமுறை படுத்த வேண்டும், வட மாகாணத்தில் மாகாண சபைக்கான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் வைத்திருகிறது, சிறி லங்கா அரசுக்கு எதிராக முதல் தடவையாக வைக்கப்பட்ட பரிந்துரை என்று நாம் பார்த்தாலும் இந்த பரிந்துரைக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் வாக்களிக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்ளும் நிலையில் தமிழராகிய எங்களுக்கு திருப்தி அளிக்கும் அளவுக்கு இந்த பரிந்துரையில் எதுவும் இல்லை என்று தான் நாம் கூற வேண்டும்.
வடக்கு- கிழக்கு என்ற தமிழ் பிரதேசங்களை பிரித்து காட்டும் இந்த பரிந்துரை மாகாண சபை என்ற தீர்வுக்குள் தமிழர்களை சிங்கள அடக்கு முறைக்குள் தொடர்து வைத்திருக்கும் தீர்வாகவே நாம் பார்க்கிறோம்.
64 வருடங்களாக சிறி லங்காவின் அடக்கு முறைக்குள் அழிந்து கொண்டு இருக்கும் நாம், சேனல் 4 மீண்டும் ஒரு புதிய சிறி லங்காவின் கொலைகளங்கள் தண்டிக்கப்படாத குற்றங்கள் என்ற ஆவணப்படம் வெளி வந்து அந்த ஆவணப்படடில் ஒரு சிறுவனை ஈவு இரக்கமில்லாமல் சுட்டு கொள்ளும் படங்களை காட்டி, சிறி லங்கா அரசின் முகத்தை கிழித்து காட்டி, சர்வதேச அளவில் மீண்டும் ஒரு விழிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,

அண்மையில் பல இணைய தளங்களில் வெளிவந்த படங்களில் எமது சகோதிரிகளுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை பார்த்த பிறகும் புலம் பெயர் ஈழத் தமிழர்களாகிய நாம் ஒன்றும் நடக்காதது போல் எப்படி எம்மால் இருக்க முடிகிறது?
தமிழகதில் சிறி லங்கா அரசுக்கு எதிராக எல்லா கட்சிகளும் குரல் கொடுகிறது, தமிழகமே ஈழத் தமிழர்களுக்கு நீதியான தீர்வு கிடைக்க வேண்டும், அவர்கள் சுதந்திரமாக வாழ்வது தான் நிரந்தர அமைதிக்கு வழி என்று ஒரு கொந்தளிப்பு நிலையில் இருக்கும் போது புலம் பெயர் ஈழத் தமிழர்கள் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?
எமது போராட்டம் வலுபெற வேண்டிய காலம் இது, தாயகத்தில் இருந்து எமது உறவுகள் எமது போராட்ட குரலை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையில் சிறி லங்கா அரசுக்கு எதிராக பரிந்துரையை வைத்திருக்கும் அமெரிக்க அரசுக்கு, வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் வாழும் தமிழர்களுக்கு நீதியான சர்வதேச சுயாதின விசாரணை தேவை, டப்ளின் (Dublin Peoples Tribunal) மக்கள் நீதிமன்றத்தின் பரிந்துரைகள், ஐக்கிய நாடுகள் சபை விசாரணை குழுவின் பரிந்துரைகள் கருத்தில் எடுத்து கொள்ளப்பட்டு அதற்கு ஏற்ப விசாரணை சர்வதேச நீதி மன்றத்தை நோக்கி நடை முறைபடுத்த வேண்டும் என்றும் அங்கு 64 வருடங்களாக படுகொலைகள் நடைபெறுகிறது என்று வலியுறுத்தி அமெரிக்க அரசுக்கு தமிழீழ மக்களின் பரிந்துரையை முன்வைக்கும் முகமாக வரும் புதன்கிழமை (21/03/2012)  பாரிசில் அமெரிக்க தூதரகம் அருகாமையில் Place de la Madeline-Eglise de la Madeline (Metro 8-12-14) முன்பாக மாலை 3h00 மணி முதல் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எமது குரல் மீண்டும் உரத்து ஒலிக்கும் நேரம் இது -எமது அமைதி தான் எம்மை அழித்து கொண்டு இருக்கிறது.
உறவுகளே அனைவரும் நாம் உலக தமிழர்களாக நின்று எமது தாயாக தமிழர்களை சிறி லங்கா அரசின் பிடிக்குள் இருந்து சர்வதேச புவியல் அரசியலில் இருந்து விடுதலை அடைய குரல் கொடுப்போம் வாருங்கள்.
- பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை
-தொடர்புகளுக்கு: 06 49 41 58 17

No comments:

Post a Comment