Saturday, March 03, 2012

நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியது பிரான்ஸ், இத்தாலி தேசியச் செயற்பாட்டாளர்கள் விடுதலை

கடந்த 2007ம் ஆண்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் மனிதநேய செயற்பாட்டாளர்களும் பயங்கவாதத்திற்கும், போராட்டத்திற்கும் உதவினார்கள் என்று சிறைப்பிடிக்கப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு 2009 இறுதிப் பகுதியில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு நவம்பர் 23ம் திகதி 7 வருடம், 5 வருடம், 4 வருடம் எனவும் சிலர் நிரபராதிகள் என்றும் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. தமிழர் ஒருங்கி ணைப்புக்
குழுவும், அதன் செயற்பாட்டாளர்களும் ஒரு பயங்கரவாதப் போராட்டத்திற்கு உதவவில்லை என்றும் அது மனிதநேயத்துடன் உலக சட்ட விதிகளுக்கு உட்பட்டே பணியாற்றியது என தமிழர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியதுடன் தீர்ப்பை ஏற்றுக்
கொள்ளாது மேல் முறையீடு செய்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு பொறுப்பாளராக இருந்த திரு.ந.மதிந்திரன் அவர்களை விடுதலை செய்திருந்தது.

தொடர்ந்தும் பூரண விசாரணையை 2011 டிசெம்பர் 6ம் திகதி எடுத்துக் கொண்டு 3 நாட்கள் விசாரணை செய்து கடந்த 22ம் திகதி மேல்நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதில் 7 வருடங்கள் கொடுக்கப்பட்ட தண்டணையை 5 வருடங்களாக்கியதுடன் ஏனையவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகள் வழங்கப்பட்டு அனைவரும் வெளியில் விடப்பட்டுள்ளனர்.
இனி எவரும் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டிய நிலையிருக்காது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று இதே காலப்பகுதியில் இத்தாலி நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், அதன் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டதும் பின்னர் அவர்கள் படிப்படியாக மூன்று மாதங்களுக்குள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 2011ம் ஆண்டு விசாரணைக்கு எடுக்கப்பட்ட இவர்களின் வழக்கு மூன்று மாதங்களுக்கு மேல் நடைபெற்று வழக்கினைத் தள்ளுபடி செய்து அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
64 பக்கங்கள் கொண்ட இத் தீர்ப்பானது 23ம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அதிலே குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு.
"UNO Convention 1999 (New York) art.21 அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதம் என்று கூற முடியாது. ஏனென்றால் அதன் செயல்கள் ஒரு போராட்ட சூழ்நிலையில் ஒரு நாட்டின் இராணுவத்தினராலும், ஒரு இயக்கத்தினராலும் விடுதலைக்காக போராடுகின்ற போராளிகளாலும் நடாத்தப்பட்டதால் அவ்வாறான விடயங்கள் பயங்கரவாதம் என்று கூற முடியாது போர்க்குற்றம் என்று கூறப்பட வேண்டும்.
‘விடுதலைப் புலிகள் வெறும் ஆயுதப் போராட்டம் நடாத்தவில்லை. அரசியல் ரீதியாக ஓர் அரசுக்குரிய கட்டுமானங்களையும் செயற்படுத்தியவர்கள். ‘விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாதம் என்று சொல்வதற்கு நாடு கடந்த எந்தவிதமான தாக்குதல்களையும் நடாத்தவில்லை.
ஒரு விடயம் மட்டும் ராஜீவ்காந்தி கொலை. இதை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்பதற்கு சரியான ஆதாரம் இன்னும் இல்லை (சீக் இனத்தவர் செய்திருக்கலாம் என்ற குழப்பங்கள்) ‘நிதி சேர்த்ததானது தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்காக இருக்கலாம்.
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு செய்வதற்கு பயன்பட்டதாகவோ அல்லது அந்த நோக்கத்திற்காகவோ பயன்பட்டதற்கான ஆதாரம் இல்லை. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, தீர்ப்பு வெளிவந்த நிலையில் தேசியச் செயற்பாட்டாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதுபோன்ற பல செய்திகளை, தமிழின விரோத சக்திகள் பரப்பிவந்தன. தமிழ் மக்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்குவதுடன், ஜெனீவாவில் மார்ச் 5ம் திகதி நடைபெறும் பாரிய எழுச்சியைத் தடுக்கும் வகையிலும் இப் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டிருந்தன.
எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் செல் நகரத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்வொன்றில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளரும், மனிதநேயச் செயற்பாட்டாளராய் செயற்பட்டு சிறைத்தண்டனை பெற்றவருமாகிய திரு.து.மேத்தா அவர்கள் அந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் உரையாற்றியுமிருந்தது இவர்களின் பொய்ப் பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Font size: Decrease font Enlarge font

No comments:

Post a Comment