Saturday, March 03, 2012

விடுதலைப் புலிகள் வீழவில்லை! அவர்கள் இப்போதும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வில் நெருப்பாக எழுந்து நிற்கிறார்கள்!!

தமிழினம் தங்களது வாழ் நாளிலேயே ஈகத்தின் உன்னதங்களையும், வீரத்தின் விளை நிலத்தையும், இலட்சியங்களின் உறுதியையும், அர்ப்பணிப்புக்களின் அணிவகுப்புக்களையும், கூடவே துரோகங்களின் குழிபறிப்புக்களையும், எதிரிகளின் கொடூரங்களையும் தரிசனம் செய்து வருகின்றது.

எங்கள் ஈழத்தின் கல்லறைகள் யாவும் வரலாற்றின் பதிவுகளாக மட்டும் அல்லாமல், துரோகங்களின் பதிவுகளாகவும் சாட்சி பகர்கின்றன. தமிழீழ விடுதலைப் போரில் ஈகங்கள் மட்டுமல்ல, துரோகங்களும் கல்லறைகளற்ற பல புதை குழிகளையும், அடையாளம் அழிக்கப்பட்ட சாம்பல் மேடுகளையும் உருவாக்கியுள்ளன. வீழ்த்தப்பட்ட புலிகளுக்கும்,
கொலைக்களத்தில் சாய்ந்து போன மக்களுக்கும் எதிரிகள் மட்டும் காரணம் அல்ல, துரோகிகளும் கூடவே இருந்து குழிபறித்த வரலாறுகளும் உள்ளன. மரணங்களை விடவும், துரோகங்களே அதிக விலிகளை ஏற்படுத்துகின்றன.


முள்ளிவாய்க்கால் பேரழிவும், அதன் பின்னரான புலம்பெயர் களச் சிதைவும் ஒரிரு தினங்களில்  உருவான கதைகள் அல்ல. அந்தப் பெருந்துயர் நீண்ட காலத் திட்டமிடலின் இறுதி வடிவம். சமாதான காலம் தமிழீழ மக்களுக்கு வழங்கிய தண்டனை. விடுதலைப் புலிகளது கோட்டையின் இரும்புக் கதவுகள் திறந்து கொண்டதனால், துரோகங்கள் உள்ளே நுழைந்து ஈனத்தனம் செய்து முடித்தது.


உலக நாடுகளின்மீதான விடுதலைப் புலிகளது நம்பிக்கையும், தமிழ் மக்களது எதிர்பார்ப்புக்களும் பொய்த்துப் போனதனால், சிங்களம் நடாத்திய கோர வெறியாட்டத்தில் தமிழினம் கருவறுக்கப்பட்டது. ஒவ்வொரு போர் முனையிலும், ஒவ்வொரு படையணியிலும் எதிலியினால் உள்நுழைக்க வைக்கப்பட்ட இயங்கு தசைகள் வழங்கிய தகவல்களால், ஈழத் தமிழினத்தின் காவல் தெய்வங்கள் கல்லறைகளும் அற்று, கடற்கரை மண்ணில் வீழ்த்தப்பட்டார்கள்.


விடுதலைப் புலிகளது ஒரு பாதி தமிழீழ மண்ணில் புதையுண்டு போவதற்குப் பல வருடங்கள் முன்பாகவே, விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களும் எதிரிகளால் குறி வைக்கப்பட்டது. சமாதான காலத்தின் சாத்தியங்கள் ஊடான விலை பேசுதல்களில் பலர் தலை சாய்ந்தார்கள். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டுக்கொண்ட முன்னாள் பொறுப்பாளாகள் சிலர் சிங்கள தேசத்தின் முகவர்களாக மாறிச் செயல்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதியான கருணாவையே காலில் விழ வைத்த சிங்களம், புலம்பெயர் தேசங்களை நோக்கிச் சதையுடன் எலும்புகளை வீசி எறிந்தது. சில ஈனப் பிறவிகள் அதனைக் கவ்விக்கொண்டன.


ஆனாலும், சிங்கள தேசத்தின் கணக்கு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தவறிப் போனது. முற்றுகைக்குள் வைத்து, பொருளாதாரத் தடை விதித்தும் அசராமல் எழுந்தே நின்ற வன்னி மக்களை, முள்ளிவாய்க்கால்வரை நகர்த்தி அழிக்க முடிந்த சிங்களத்தால், புலம்பெயர் தமிழர்களது தேசிய விடுதலை உணர்வைச் சிதைக்க முடியவில்லை. பணத்தாலும், பலத்த கவனிப்புக்களாலும் சிலரை மட்டுமே வீழ்த்த முடிந்த சிங்களத்தால் புலத்தை நிர்மூலமாக்க முடியவில்லை.

ஜனநாயக நாடுகளின் நிழலில் சுதந்திரப் பறவைகளாக நிமிர்ந்து நிற்கும் புலம்பெயர் தமிழர்களை சிங்களத்தின் கோரப் பார்வையும், கொடூர இனவெறியும், கொலைவெறி எண்ணமும் அசைத்துவிடவில்லை. அச்சமற்ற மண்ணில் நின்று, தமது உறவுகளின் விடிவுக்கும், விடுதலைக்குமாகப் போராடும் கடமையிலிருந்து புலம்பெயர் தமிழர்களை சிங்களத்தால் பிரித்துவிட முடியவில்லை.

விடுதலைப் புலிகள் என்ற உன்னதங்களிலிருந்தும், தேசியத் தலைவர் என்ற பேரொளியிலிருந்தும் புலம்பெயர் தமிழர்களைப் பிரித்து எடுக்க முடியாத சிங்களம், துரோகங்கள் ஊடான பிளவுகளுக்கும் முயற்சித்துப் பார்த்தது. அணிகளை உருவாக்கி மோத வைத்தது. ஒரு களத்தில் இணைய விடாமல் தடுத்தும் பார்த்தது. அதன் உச்சக் கட்டமாக, மாவீரர் தினத்தையும் குறி வைத்து அடித்தது. ஆனாலும், தலைவன் காலத்துத் தமிழர்கள் இன்னமும் உரமான உறுதி பெறவே அவை எல்லாம் காரணமாகியது.

உலகில் மனிதாபிமானங்கள் சிங்கள தேசத்தின்மீது கொழுத்திப் போட்ட நெருப்பு, பெருந் தீயாகி ஐ.நா. மன்றத்தையே அசைத்துவிட்டது. சனல் 4 ஈழத் தமிழர்களது அவலங்களை உலகமயப்படுத்தியது. தேசங்கள் எங்கும் ஈழத் தமிழர்களுக்கான நீதி கோரும் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. ஐ.நா. மனித உரிமைகள் மையம் சிங்கள தேசத்தின்மீது குற்றப்பத்திரிகை வாசிக்க உள்ளது. இந்த நிலையிலும், தான் தப்பிக்கொள்ள துரோகங்களையே சிங்களம் நம்பிக் களம் இறங்கியுள்ளது.

ஜெனிவா ஐ.நா. மன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் தமிழினத்தைக் கருவறுக்கும் துரோகங்கள் சிங்களத்தால் விதைக்கப்பட்டுள்ளன. மார்ச் 05 இல் ஐ.நா. முற்றத்து முருகதாசன் திடலில் புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தவுள்ள பேரெழுச்சியை முறியடிக்க சிங்களம் பெரும்பாடு படுகின்றது. சிங்கள தேசத்தின் ஆதரவுக் குழு ஒன்று இதற்காகக் கொம்பு சீவி, களம் இறக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் வீழவில்லை! அவர்கள் இப்போதும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வில் நெருப்பாக எழுந்து நிற்கிறார்கள். தமிழீழம் மலரும்வரை புலிகளின் தாகம் தணியப் போவதில்லை. இப்போதும், அவர்களே தமிழீழ விடுதலைப் போர்க் களத்தின் நாயகர்கள். அவர்களது இலட்சியங்களை நெஞ்சில் நெருப்பாய் சுமந்தபடி, தமிழீழம் நோக்கிப் புலம்பெயர் தமிழர்கள் வருவார்கள். அதை, எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது!

- தமிழ்ச்செல்வன்Feb 27, 2012 / பகுதி: கட்டுரை /

No comments:

Post a Comment