சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் காலம் காலமாக ஈழத்தமிழ்மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வந்த இனவழிப்பின் அதி உச்சக்கட்டமாக மே 2009ல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மாபெரும் கொடூரமான மனிதப்படுகொலையானது தமிழின வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத மிகப்பெரும் பேரவலமாக அமைந்துள்ளது. இப்பேரவலத்தை நினைவுகூரும் நாளாக மே 18ம் நாள் தமிழ்த் தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பேரவலத்தை ஆண்டுதோறும் நினைவுகூருவதனூடாக அனைத்துலக சமூகத்திற்கு ஈழத்தமிழ்மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையினை வெளிப்படுத்தும் நோக்கிலும், தமிழீழ விடுதலையின் அவசியத்தை எடுத்துரைக்கும் நோக்கிலும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவு ஒன்றுகூடல் 2012 மே 18ம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தனது அறிக்கையில் மகிந்த ராஜபக்ச அரசை போர்க்குற்றமிழைத்ததாக அறிவித்துள்ளது. டப்ளின் தீர்ப்பாயமானது தமிழர் தாயகத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதென்பதையும், மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதென்பதையும் உறுதிசெய்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் அவையின் 19ஆவது அமர்வில் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள், பொறுப்புக்கூறல் என்பவற்றை மையப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சிங்களப் பேரினவாதிகள் ஒருமித்த குரலில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழர்களாகியநாம் ஸ்ரீலங்கா அரசை சர்வதேசநீதிமன்றில் நிறுத்தி தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நியாயத்தைப் பெறவும், தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் இனவழிப்பை உலகிற்கு எடுத்துக்கூறும் வகையிலும் மே18 தமிழர் இனவழிப்பு நாளையொட்டி நிகழ்த்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்துகொண்டு ஒன்று திரண்டு செயல்ப்படுவதன் மூலம் எமது தாயக விடுதலையை வென்றெடுக்க உங்கள் வரலாற்றுக்கடமையை வலுப்படுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
தமிழர்களின் அபிலாசையை ஒன்றுபட்ட குரலில் உலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கில் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஜேர்மனியில் தமிழ்த்தேசிய விடுதலையில் அக்கறை கொண்டு செயல்படும் அனைத்து அமைப்புக்களையும் ஒன்றிணைத்து மேற்படி ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசின் மேற்படி செயற்பாட்டை வரவேற்பதோடு தமிழர் இறையாண்மைக்கான அமைப்பும் கைகோர்த்து நிற்கிறது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு
ஜேர்மனி.
தொடர்புகள் -015777284480
vstgermany@googlemail.com
தொடர்புகள் -015777284480
vstgermany@googlemail.com
No comments:
Post a Comment