Monday, April 16, 2012

ஆறாத்துயர்கள்! தமிழீழத்திலிருந்து -நீலவண்ணன்-

annan-03ஆண்டாண்டு காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு சிதைவுற்ற நிலையில் இருந்த தமிழினம் படும் துன்பங்கள் வேதனைகள் நெருக்கடிகளைக் கண்டும் அனுபவித்தும் வந்த இளந்தலைமுறையினர் வெகுண்டெழுந்து ஆண்கள், பெண்களென விடுதலை வேண்டி விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.
இளவயதினரான அவர்களுக்கும் பெற்றோர், உறவினர், அண்ணன், தம்பி, தங்கை, உறவுகள் மற்றும் ஆசாபாசங்கள் இருக்கவே செய்தன. ஆயினும் தம் சுயநலத்தினைக் கருத்திற்கொள்ளாது நம் இனத்தின் பொதுநலமும்
நல்வாழ்வுமே அவர்களின் இலக்காகக் கொண்டு சகல உறவுகளையும் பந்தபாசங்களையும் தமது சுயஆசாபாசங்களையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டு கரடுமுரடானதும், முட்கள் நிறைந்ததும், எந்நேரத்திலும், உயிரையும் உடல் உறுப்புகளையும் இழக்க நேரிடும் எனத் தெரிந்து கொண்டு தம்மை விடுதலைப்பணியில் இணைத்துக் கொண்டனர்.

அவர்களுக்கு அப்படியாதொரு விடுதலை வேட்கை எவராலும் வலிந்து ஊட்டப்படவில்லை. அது அவர்களுக்குள் தானாகவே தோன்றி வளர்ச்சியடைந்தது.
1958களில் நடைபெற்ற இனக்கலவரத்தின் மூலம் அவர்களது உறவினர்கள் அல்லது குடும்பத்தில் ஒருவர் அல்லது ஊரில் ஒருவர் என சுட்டும், வெட்டியும் ,எரித்துக் கொலைசெய்யப்பட்ட போதும் அதன்பின்னர் 1983 ஆடிக்கலவரங்களின் போது நடைபெற்ற அநியாயமான கொடூரக் கொலைகளினால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் கப்பல் மூலமாக வடக்கில் கொண்டு வந்து இறக்கப்பட்ட சம்பவங்களை நேரில் கண்டும் அனுபவித்தவர்களுமே இவ்வாறு தாமாக இணைந்தவர்களில் பெருமளவிலானோராகும்.
இவ்விதம் தம்மை அந்நாட்களில் விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டவர்கள் ஒழுங்கான விதத்தில் மூன்று வேளை உணவையோ அல்லது ஏனைய வசதிகளையோ அனுபவிக்கவில்லை. மாறாக அவர்கள் ஒரு வேளை உணவையும் சிலவேளைகளில் அதுவும் கூட இல்லாமல் இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் இருந்தன. பல நாட்கள் குளிக்கவோ உணவோ அல்லது உறக்கமோ இன்றிக் காடுகளில் கட்டாந்தரைகளில் படுத்துறங்கியும் உள்ளனர்.
ஏன்? எதற்காக? நம் இனத்தின் விடிவுக்காகத் தான்.
பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்து நகர்ந்து வந்த போராட்டச் சமர்களில் எத்தனையாயிரம் போராளிகள் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டனர் என்பதோடு எத்தனையாயிரம் போராளிகள் தமது அங்கங்களை இழந்து ஊனமுற்றவர்களாயினர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஊனமுற்றார்கள் என ஒருவரியில் கூறிவிட்டால் போதாது. எத்தகைய ஊனம். சிலர் இரண்டு கண்பார்வையினையும், சிலர் ஒரு கை ஒரு காலையும் , சிலர் இடுப்புக்குக் கீழே அறவே மரத்துவிட்ட நிலையையும், சிலர் இரு கைகளையும் என ஊனமுற்றவர்களின் அவலங்கள் பல.
எப்படியிருந்த போதிலும் அவர்களை அமைப்பு கைவிட்டுவிடவில்லை. அவரவர் ஊனமுற்ற தன்மைகளுக்கேற்ப அவர்களால் செய்யக்கூடிய வேலைகளுக்குரிய பயிற்சிகளை வழங்கி அல்லது கல்வியை ஊட்டி அவர்களை வைத்துப் பராமரித்து அவர்களும் சமர்களில் நேரடிப் பங்கேற்காதுவிடினும் பின்தள வேலைகளில் மக்களுக்குச் சேவையாற்றும் பணிகளில் கடமைபுரிந்து வந்தனர்.
ஊனமுற்ற போராளிகளில் ஒருசிலர் திருமணம் புரிந்தும் வாழ்க்கையை நடத்தினர். இரு கண்களையும் இழந்த ஒரு போராளி ஒரு காலை இழந்த பெண்போராளியை மணந்து இறுதிவரை மக்களுக்கு சேவை புர்pந்ததையும் நேரில் கண்டோம். இப்படியாகப் பலர் தம் இழப்புக்களைப் பற்றிக் கவலைப்படாது தம்மாலியன்ற பணிகளைச் செய்தவண்ணமிருந்தனர்.
சிறீலங்கா அரசினால் ‘மனிதாபிமான மீட்புப் போர்’(தமிழினத்தை அழிக்கும் போர்) எனக் கூறிக்கொண்டு நடத்திய இறுதிப்போரின் முடிவில் மடிந்தோர் போக எஞ்சியோர் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்துச் சரணடைந்தனர். ஒரு சிலர் அகதிகள் முகாம்களில் வைத்தும் கைது செய்யப்பட்டனர்.
கணவனும் மனைவியும் தடு;ப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். சில குடும்பங்களில் கணவன் தடுப்பிலும் மனைவி வெளியிலும் , சில குடும்பங்களில் மனைவி தடுப்பிலும் கணவன் வெளியிலுமாக பல்வேறுபட்ட நிலைப்பாடுகள்.
போர் முடிவடைந்து மூன்றாண்டுகளாகின்றன. சரணடைந்தவர்களில் பெரும்பாலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் குறைந்த எண்ணிக்கையானேரே தடுப்பில் உள்ளனர் என்றும் அவர்களையும் வெகுவிரைவில் விடுவித்துவிடுவோம் என்றும அரசாங்கம் கூறிவருகின்றது.
விடுவிப்பதுடன் அவர்களது கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது அரசு. அதேவேளையில், புனர்வாழ்வு பெற்றவர்களுக்குத் தொழில் முயற்சிக்காக வங்கிக் கடன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனப் பலவற்றைக் சொல்லளவில் கூறி வருகின்றது. ஆனால், செயலளவில் எதுவும் நடைபெறுவதாக இல்லை. அப்படித்தான் ஓன்றிரண்டு நடந்திருந்தாலும் கூட அதுவும் தமக்கு வேண்டியவர்களுக்கானதாகவே இருக்கும்.
கணவன்மார்கள் தடுப்பில் இருக்கும் போது அவர்களின் மனைவிகள் தங்க@ரில் பட்ட துன்பங்கள் வேதனைகள் அவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறிக் கொள்வோரினால் பட்ட அவஸ்தைகள் தொந்தரவுகள் எண்ணிலங்கா. வேண்டுமென்றே பெண்களை அடிக்கடி விசாரணைக்கென அழைப்பது அவர்களை மிரட்டுவது இப்படி வெளியே கூறமுடியாத பல அநாவசியத் தொந்தரவுகளைக் கொடுத்து வந்தனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறும் போராளிகளின் குடும்பங்கள் படும் அவஸ்தைகளை எளிதிற் கூறிவிட இயலாது. எனினும் நான் சந்திக்க நேர்ந்த ஓரிரு குடும்பங்களின் நிலைமையை அவர்களின் வாயிலாக அறியக்கிடைத்தமையால் மனம் வெதும்பி அவர்களது நிலையை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஏதாவது விமோசனம் கிடைக்குமா எனும் நப்பாசையால் இதனை எழுதுகிறேன்.
வன்னியில் மன்னார்ப் பகுதியில் கடந்த 1995 இன் நடுப்பகுதிகளில் அப்போராளியை நான் சந்திக்க நேர்ந்தது. மட்டக்களப்பைச் சேர்ந்தவர். 1987களில் போராட்டத்தில் இணைத்துக்கொண்டவர். 1991 இல் மன்னார் முருங்கன் பகுதியில் பதுங்கித் தாக்குதல் நடத்தும சம்பவத்தில் முழங்காலுக்குக் கீழ் ஒரு காலையும் ஒரு கண்பார்வையையும் இழந்தவர். ஆயினும் செயற்கைக் காலுடன் நடமாடி வலுவிழந்ததைக் காட்டிக் கொள்ளாது ஊக்கத்துடன் தன் விடுதலைப் பணியைக மேற்கொண்டிருந்த வண்ணமிருந்தார்.
எல்லோருடனும் இனிமையாகவும் பண்பாகவும் பழகுபவர். அதேபோன்று யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் 1998களில் போராளியாக இணைந்து கொண்டவர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி 2003இல் திருமணம் செய்தனர்.
2005இல் பெண் போராளி எறிகணை வீச்சில் அடிவயிற்றில் பலத்த காயமேற்பட்டு குடல் பாதிப்பினால் அமைப்பில் இருந்து விலகினார். விலகிய போதும் கணவனுடன் இணைந்து இறுதிவரை மக்களுக்கு சேவை புரிந்தார்.
இடப்பெயர்வுகளின் போது அவ்விருவரும் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் அவர்களைத் தெரிந்தவர்களுக்கே புரியும். 2008இல் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து முல்லை நோக்கிப் பல இடங்களுக்குமாக அடுத்தடுத்து இடம்பெயர்ந்த வேளைகளில் நான் இறுதியாக அவர்களை மாத்தளன் வைத்தியசாலையில் வைத்துச் சந்திக்க நேரிட்டது.
பின்னர் அவர்களை அந்த நெருக்கடி மிகுந்த இறுதிநாட்களில் சந்திக்க முடியவில்லை. அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
ஆனால் , எதிர்பாராதவண்ணம் கடந்த மாதம் சிகிச்சை பெற யாழ். மருத்துவமனைக்குச் சென்றவேளையில் அந்தப் போராளியை சந்தித்தேன். என்னால் அவரை அடையாளம் கண்டு கொள்ளவே முடியவில்லை. அவரது செயற்கைக் காலினை வைத்து அடையாளங் கண்டுகொண்டனே தவிர மற்றும் அவரின் உருவத் தோற்றம் முற்றிலுமாக மாறிவிட்டிருந்தது.
குழிவிழுந்த கண்கள், வயதுக்கொவ்வாத மூப்புத்தன்மை, உடல் மெலிந்து காணப்பட்டார். அவர் என்னைக் கண்டதும் கண்கலங்கிவிட்டார். நாத் தளுதளுக்க “தம்பி என் செய்கிறீர்கள் , எப்படி இருக்கிறீர்கள் , தங்கச்சி எங்கே?” எனக் கேட்டேன் அவரிடம். நான் அவர்களை அந்நாள் தொடக்கம் பிள்ளையாகக் கருதி “தம்பி, தங்கச்சி என்றே அழைத்து வந்தேன்.
குறைந்தது 24 வருடங்களாவது நம்மினத்துக்காகத் தன் சுகநலன்களை பெற்றோரை எல்லாம் மறந்துவிட்டு தனது காலையும் ஒரு கண்ணையும் இழந்த நிலையில் இன்று சமூகத்தின் மத்தியில் தம் மனைவியுடன் ஓர் சாதாரண வாழ்க்கையைக் கூட வாழ இயலாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவரின் கதையைக் கேளுங்கள்.
“நான் 87இல் போராட்டத்தில் இணைந்த பின்னர் ஊருக்கும் போகவில்லை. 2004 இல் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தில் எனது பெற்றோர், சகோதரங்களையும் இழந்துவிட்டேன். நான் ஓமந்தையில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தேன். மனைவி ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் விலகியிருந்தமையால் அவரைக் கைது செய்யவில்லை.
நான் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தடுப்பில் இருந்து கடந்த மாதம் தான் வெளியில் வந்தேன். நான் தடுப்பில் இருந்த வேளையில் எனது மனைவி தன் ஊருக்கு (யாழ்ப்பாணம்) பெறறோருடன் தங்கலாம் எனச் சென்றுள்ளார். ஆனால், அவரது பெற்றோரும் ஏற்கனவே நாங்கள் வன்னிக்குள் இருந்த வேளையில் இறந்துவிட்டதாக அறிந்து அவரது சகோதரங்கள் உறவினர்களிடம் ஆதரவு நாடிச் சென்றவேளையில், அவர்கள் எவருமே இவரை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இந்நிலையில் அவர் தாங்கள் முன்னர் இருந்த அக்கராயன்குளத்திற்குச் சென்று அங்கு முன்னர் எம்முடன் பழகிய ஓர் ஏழைக்குடும்பத்தவருடன் நான் வரும்வரை தங்கியிருந்தார். அந்த இருவருட காலத்தில் அவர் பல துன்பங்களை அனுபவித்துவிட்டார். ஆதரவளித்த குடும்பத்தவர்க்குப் பாரமாக இருக்க விரும்பாத அவர் தோட்டக் கூலி வேலைக்குச் சென்று அதன் மூலம் வரும் வருவாயில் தனது உணவு மற்றும் செலவுகளைச் சமாளித்து வந்தார்.
இப்போது நானும் வந்திட்டன். எங்கள் இருவருக்கும் உறவினர் எவருமில்லை, உதவியுமில்லை, ஆதரவுமில்லை. என் உடல் இருக்கும் நிலையில் பாரமான வேலை எதுவுமே செய்ய இயலாது. வருமானம் எதுவும் இல்லை. எங்களைத் தெரிந்தவர்கள் கூட எங்களுடன் கதைக்கப் பயப்படுகிறார்கள் கண்டாலும் கூட கண்டும் காணாத மாதிரி ஒதுங்கிச் சென்று விடுகின்றனர். அவர்களையும் குறை கூற முடியாது.
ஏனெனில் எங்களுடன் உறவு வைத்தால் இராணுவத்தினரால் தங்களுக்கு ஆபத்து அல்லது நெருக்கடி ஏதும் விளையுமோ என்ற அச்சத்தாலும் இருக்கலாமல்லவா? என்ன செய்வது என்றே தெரியவில்லை. நாங்கள் அன்றாட உணவுக்கே அல்லாடுகின்றோம். எனது காலில் தாங்க முடியாத வலியொன்று அண்மைக்காலமாக இருந்து வருகின்றது. அதற்குச் சிகிச்சை பெறவே இங்கு வந்தேன். அவவையும் கூட உதவிக்கு அழைத்து வந்திருக்கலாம். ஆனால் இ பஸ் செலவுக்குக் காசு இ;ல்லை. அதனால்தான் நான் மட்டும் தனியா வந்தேன்” அவ்வாறு கூறி முடித்ததும் என் அடிவயிரெங்கும் பற்றி எரிவது போல் இருந்தது.
ஒரு காலத்தில் தன் சுகநலம் , சுயநலம் , ஆசாபாசங்களை என எதனையும் கருத்திற் கொள்ளாது மக்களின் நலனுக்காகத் தம் எதிர்காலத்தை இழந்து நிற்கும் இவர்களைப் போன்ற பலர் சமூகத்தால் ஒதுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் செய்வதறியாது அன்றாட ஜீவனத்திற்காக தவங்கிடக்கும் நிலையில் உள்ளனர். இந்த ஆறாத்துயரையெல்லாம் யாரிடம் சொல்லியழ?
-நீலவண்ணன்-

No comments:

Post a Comment