Thursday, April 05, 2012

ஏப்ரல் 2ஆம் நாள் திங்கட்கிழமை கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடிய பாராளுமன்ற முன்றலில் கனடிய அரசிற்கு நன்றிதெரிவிக்குமுகமாக திரண்ட கனடியத் தமிழர்கள் ஒட்டாவாவில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவராலங்களுக்கும் சென்று கனடியத் தமிழர்களின் நன்றியறிதல் கடிதங்களையும் நேரடியாக கையளித்தனர்.
முன்கூட்டியே தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரங்களைப் பெற்றுக் கொண்ட கனடியத் தமிழர் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்கள் சமீபத்தில் nஐனிவாவில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 24 நாடுகளில் 15 நாடுகளின் தூதுவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் நாடுகளின் அரச தலைவருக்கு எழுதப்பட்ட கனடியத் தமிழர்களின் நன்றியறிதல் கடிதங்களை நேரடியாக கையளித்தனர்.


நன்றியறிதல் கடிதங்களைப் பெற்றுக் கொண்ட தூதுவர்கள் அது குறித்து பெரு மகிழ்ச்சி தெரிவித்ததுடன் அதனை தமது அரச தலைவருக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தனர். சிறீலங்காவில் மனித உரிமைகள் பொறுப்புக்கூறுதல் நல்லிணக்கம் காணுதல் ஆகிய விடயங்களில் தொடர்ந்தும் காத்திரமாகவும் பொறுப்புணர்வுடனும் நடந்து தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கு வழிவகுக்குமாறு கனடியத் தமிழர்கள் அவர்களை மேலும் வேண்டியுள்ளனர்.
தேவேளை ஒட்டாவா பாராளுமன்ற முன்றலில் பெருமளவில் தமிழர்கள் கூடி நன்றி தெரிவிக்கின்றார்கள் என்ற செய்தியையும் தாம் அறிந்திருப்பதாகவும் அது தமக்கு மேலும் மகிழ்ச்சி தருவதாகவும் அவர்கள் தமிழர் பிரிதிநிதிகள் குழுவிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை நன்றி தெரிவிப்பதற்காக ஒரு இனம் வந்தது தம்மைப் பொறுத்தவரை இது தான் முதல்தடவை என்றும் இந்நிகழ்வு தம்மை பெரிதும் மனம் நெகிழ வைத்துள்ளதாகவும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வெளிப்படையாகவே தெரிவித்தனர். ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினர் 2009 தமிழர்களின் பாரிய ஒன்றுகூடல்களை ஒரு கணம் நினைத்து பேச முடியாமல் மேடையில் அழுததாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தமிழர்களின் நன்றி தெரிவிக்கும் ஒன்றுகூடலைப்பற்றி பாராளுமன்றத்திற்கு உள்ளே கட்சி பேதமின்றி அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பேசிக் கொண்டதாக மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமது செய்தியாளரிடம் பேசும் போது தெரிவித்துள்ளார்.
கனடியப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் ஒபாமாவுடனான ஒரு அவசர சந்திப்பின் நிமித்தம் அரை நாள் விஐயமாக அமெரிக்கா சென்றிருந்தாலும் அவர்களுக்கு தமிழர்களின் ஒன்றுகூடல் விடயம் குறித்த செய்திகள் பகிரப்பட்டதாக ஆளும் கட்சி மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment