Sunday, April 22, 2012

கலைஞரும் தமிழ் ஈழமும் - தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்


Posted Imageஇலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்த வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி இவ்வாரம் விடுத்திருக்கும் கோரிக்கை தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் சிலுசிலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை நிலைவரங்களை நேரில் பார்வையிடுவதற்காக இந்தியப் பாராளுமன்றத்தின் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவியாக இருக்கும் திருமதி சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழுவொன்று இங்கு வந்திருக்கும் வேளையில் இத்தகைய கோரிக்கையை கலைஞர் முன்வைத்திருக்கிறார். 

தனது வாழ்வில் நிறைவேறாமல் இதுவரையில் இருக்கக்கூடிய ஒரு ஆசையென்றால் அது இலங்கையில் தனித் தமிழ் ஈழமே என்று மீண்டும் குறிப்பிட்டிருக்கும் கருணாநிதி "ஐ.நா.வின் தலையீட்டையும் வாக்கெடுப்பையும் தொடர்ந்து பல புதிய தேசங்கள் உலகில் தோன்றியிருக்கின்றன. இலங்கையில் தமிழ் ஈழம் உருவாகுவதற்கு "வழிவகுக்கக் கூடியதாக வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு ஐ.நா. நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் இந்தியா நெருக்குதலைக் கொடுக்க வேண்டும்' என்று கேட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்குத் தமிழ் ஈழம் கிடைத்தால் தனக்குப் பெரும் மகிழ்ச்சியே. ஆனால், அவர்கள் இலங்கையில் ஏனைய சமூகங்களுடன் சமத்துவமானவர்களாக உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற்று வாழ்வதை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணக்கூடியதாக இருந்தாலும் அதை வரவேற்கத்தயாராக இருப்பதாக முன்னரெல்லாம் அடிக்கடி கூறி வந்திருக்கும் கலைஞர் தற்போதைய சந்தர்ப்பத்தில் தனித் தமிழ் ஈழத்திற்கான வாக்கெடுப்பிற்காக குரல் கொடுப்பதற்கு எதற்காகத் தீர்மானித்தார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இலங்கையில் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்கள் எத்தகைய சூழ்நிலையில் எவ்வாறு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளினால் எத்தகைய கோரிக்கைகளை முன்வைக்கக்கூடியதாக இருக்கிறது, எத்தகைய அரசியல் செயற்பாடுகளை அவர்களினால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கின்றது என்பதையும் சரிவரப் புரிந்துகொண்ட நிலையில் தான் தி.மு.க. தலைவர் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் தனது அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் வகுக்கின்றாரா என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. 

தமிழகத்தின் பிரதான திராவிட இயக்கக் கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்கிடையிலான வக்கிரத்தனமான கட்சி அரசியல் போட்டா போட்டிகளுக்கு வசதியான முறையிலேயே இதுவரையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளையும் அணுகி வந்திருக்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியும் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா கலைஞர் கருணாநிதிக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமென்றால், அதனால் வரக்கூடிய விளைவுகளைப் பொருட்படுத்தாமல் எந்தப் பிரச்சினையையும் பயன்படுத்தத் தவறமாட்டார். அதேபோன்றே ஜெயலலிதாவுக்கு எதிராக பயன்படுத்த முடியுமென்றால் கருணாநிதியும் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் எந்தப் பிரச்சினையையும் தவறவிடுவதில்லை. திராவிட இயக்க அரசியலில் துரதிர்ஷ்டவசமான இந்த எழுதப்படாத விதிக்கு இலங்கைத் தமிழர்களின் அவலங்கள் கூட விதிவிலக்கானதாக இருந்ததில்லை. இப்போதும் இருக்கவில்லை. 

சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு வந்திருக்கும் இந்தியப் பாராளுமன்றக் குழுவில் தி.மு.க.வின் பங்கேற்பு சாத்தியங்கள் குறித்து முன்னதாக கலைஞர் எத்தகைய யோசனையைக் கொண்டிருந்தாரோ எமக்குத் தெரியாது. ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா தனது அண்ணா தி.மு.க. எம்.பி.க்களை அனுப்பப் போவதில்லை என்று அறிவித்த பின்னர்தான் தி.மு.க. எம்.பி.க்களும் இலங்கை செல்வதில்லை என்ற முடிவைக் கருணாநிதி எடுத்தார் என்பது அவரின் அரசியல் அனுபவத்திற்கு எந்தவகையில் பொருத்தமானது என்பதை அவரே சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

ஜெயலலிதா கூட இந்தியத் துருப்புகள் கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படையெடுத்து பங்களாதேஷை உருவாக்கியது போன்று இலங்கையிலும் செய்ய வேண்டுமென்ற தொனியிலான கருத்துக்களை வெளியிட்ட காலம் ஒன்று இருந்தது. 2009 ஆம் ஆண்டு நடுப்பகுதிக்கு முன்னதாக இலங்கை உள்நாட்டுப் போர் இறுதிக் கட்டத்தை அடைந்துகொண்டிருந்த நிலையில்தான் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. தமிழகத்தின் அந்தத் தேர்தல் பிரசாரங்களின் போது, ஜெயலலிதா மீண்டும் அனல் பறக்க பங்களாதேஷ் சமாந்தரத்தை வரைந்து பேசியதை நாமெல்லோரும் மறந்துவிடவில்லை. அதற்குப் பிறகு இருவருடங்கள் கழித்து கடந்த வருடம் மே மாதம் அவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரான உடனடியாகவே இலங்கை விவகாரம் தொடர்பில் செய்தியாளர்கள் கருத்துக் கேட்ட போது "இந்த விவகாரம் இரு நாடுகளின் அரசுகளுடன் சம்பந்தப்பட்டது. மத்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு நடவடிக்கைகளை எடுக்க முடியும். மாநில அரசாங்கம் என்ற வகையில் எமக்கு இது விடயத்தில் மட்டுப்பாடுகள் இருக்கின்றன' என்று தான் பதிலளித்தார். 

எதிரணியில் இருக்கும் போது ஆவேசப் பேச்சு அதிகாரத்திற்கு வந்ததும் நயநாகரிகமான இராஜதந்திரப் பேச்சு. இதுவே கருணாநிதியும் ஜெயலலிதாவும் கடைப்பிடித்து வருகின்ற அரசியல் சந்தர்ப்பவாத தந்திரோபாயங்கள் ஆகும். இதைப் பார்த்து பரவசப்படவேண்டிய அளவுக்கு இலங்கைத் தமிழர்கள் அரசியல் ரீதியில் உள்நாட்டில் பலவீனப்பட்டு நிற்பது தான் பெரும்வேதனையாக இருக்கிறது. இப்போது கலைஞர் எதிரணியில் இருக்கிறார். உணர்ச்சிகளை கிளறக்கூடியதாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிரமான நிலைப்பாடுகளுக்காக குரல்கொடுப்பதற்கு அவருக்குரிய வரிசை முறை இது என்பதை இலங்கைத் தமிழர்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.


தமிழகத்தின் அரசியல் சக்திகள் எமது இன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமுறைகளோ, முன்வைக்கக்கூடிய கோரிக்கைகளோ இலங்கையில் தமிழ் மக்களுக்கு நெருக்கடிகளை அதிகரிப்பதாக அமையக் கூடாது என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறோம். தமிழர்களின் அவலங்கள் நீங்க வேண்டும் என்பதற்காக இதயசுத்தியுடன் எந்தவிதமான சந்தர்ப்பவாத நோக்கமுமின்றிபிழைப்புவாத நோக்கமுமின்றி குரல்கொடுக்கின்ற சக்திகள் தமிழகத்தில் நிறையவே இருக்கின்றன. தமிழகத்தின் மக்கள் இலங்கைத் தமிழர்கள் பால் கொண்டிருக்கின்ற கரிசனையையும் நாம் அறிவோம். ஆனால், சில தமிழக அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரசியல் வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்காக இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தி உணர்ச்சிகளைக் கிளறக்கூடியதாகவும் யதார்த்த நிலைமைகளுக்கு முரணாகவும் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகள் இன்றைய சூழ்நிலையில் இலங்கை மண்ணில் நிலவும் உண்மைகளை உணர்ந்துகொண்டவையாக இல்லை.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு கிட்டவேண்டுமென்று உண்மையிலேயே கலைஞர் கருணாநிதியோ அல்லது எந்தவொரு தமிழக தலைவருமோ மானசீகமாக விரும்புவதாக இருந்தால் இலங்கையில் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான அரசியல் பிரதிநிதிகள் எடுத்திருக்கின்ற நிலைப்பாடுகளுக்கு முன்வைத்திருக்கின்ற கோரிக்கைகளுக்கு ஆதரவைத் தரவேண்டுமேயன்றி தங்கள் மனம் போன போக்கில் தீவிரமான கோரிக்கைகளுக்காகக் குரல்கொடுத்து நிலைவரங்களை மேலும் மோசமானதாக்கிவிடக்கூடாது. இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீது பொருத்தமில்லாத அரசியல் தீர்வொன்றைத் திணிக்க நினைப்பது எந்தளவு தவறானதோ அதே அளவுக்குத் தவறானது அந்தத் தமிழர்களுக்காக குரல்கொடுப்பதாகக் கூறிக்கொண்டு உண்மை நிலைவரத்தைப் புரிந்துகொள்ளாமல் தருணப் பொருத்தமற்ற கோரிக்கைகளைத் தமிழகத் தலைவர்களில் எவரும் முன்வைப்பதாகும்.

http://www.globaltam...IN/article.aspx 
Posted Image

No comments:

Post a Comment