முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தமக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க சிங்களவர்கள் முயன்றுவரும் நிலையில், இதற்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் உறுதுணையாக இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முல்லைத்தீவின் பல பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த ஆக்கிரமிப்பு முயற்சியையாவது தடுத்து நிறுத்த தமிழ் அரசியல்வாதிகள், கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமெனவும் அம்மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கொக்கிளாய்ப் பகுதியில் குடியேறியுள்ள சிங்களவர்களுடனான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை முற்பகல் 9.45 மணியளவில் முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பிரதேச இராணுவ அதிகாரி மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிங்களவர்கள் தாம் கடந்த 30 வருடத்திற்கும் மேலாக தொழில் நிமித்தம் இப்பகுதியில் வந்து தங்கியிருப்பதாகவும் எனினும் தமக்கான காணி மற்றும் வீட்டு வசதிகள் போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்தனர். அவற்றை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரினார்.
இதற்குப் பதிலளித்த பிரதேச செயலர் கொக்கிளாய், முகத்துவாரம் பாதையில் வலதுபுறம் உள்ள நிலங்கள் தமிழருக்குச் சொந்தமானவை. அவற்றை பெற்றுக் கொடுக்குமாறு இங்குள்ள சிங்கள மக்கள் கோரிக்கை கடிதமொன்றை அமைச்சரிடம் கையளிக்கவேண்டும், அதனடிப்படையில் காணிகள் பெற்றுத்தரப்படுமெனத் தெரிவித்தார்.
பெறப்படும் தமிழர்களின் காணிகளுக்குப் பதிலாக காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். அதன் பின்னர் காணிகள் துப்பரவு முதற்கொண்டு வீட்டு வசதிகள் அனைத்தையும் பிரதேச செயலகம் பார்த்துக் கொள்ளும். எனவே அடுத்த சில மாதங்களில் வருகைதரவுள்ள அமைச்சரிடம் அந்தக் கோரிக்கையினை முன்வையுங்கள் என பிரதேச செயலர் தெரிவித்திருக்கின்றார்.
பிரதேச செயலரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதி தமிழருக்குச் சொந்தமான விவசாய நிலங்கள். இவை 1965 ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டின் அசாதரண சூழ்நிலைகளினால் செய்கை பண்ணப்படாதுள்ளன. தற்போது மீள்குடியேற்றம் மற்றும் இயல்பு வாழ்வு திரும்பியுள்ள நிலையில் அவையே தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாகவுள்ளன.
1965 ஆம் ஆண்டு கொக்கிளாய் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டபோது 18 சிங்கள குடும்பங்களே தற்காலிகமாக தமிழரின் அனுமதியுடன் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 320 ஆக அதிகரித்திருக்கின்றது. மேலும் அதில் பலருக்கு நிரந்தர வதிவிட உரிமமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனால் அவர்கள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கவுள்ளது.
இதேபோல் முகத்துவாரம் பகுதியில் ஏற்கனவே பெருமளவு தமிழரின் நிலம் இல்மனைட் தொழிற்சாலை அமைப்புப் பணிகளுக்கென அபகரிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் முகத்துவாரம் ஆற்றிற்கு அப்பாலுள்ள சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலமும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் எஞ்சியுள்ள நிலத்தையும் ஆக்கிரமிக்கும் முயற்சிகளை பொறுப்புவாய்ந்தவர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் தடுத்து நிறுத்தவேண்டுமெனவும் கொக்கிளாய் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment