Thursday, May 24, 2012

தனித்தமிழீழத்தை உருவாக்க ராம்விலாஸ் பாஸ்வானும் ஆதரவு


சிறிலங்காவில் சுதந்திரமான இறைமையுள்ள தமிழீழத்தை உருவாக்க, இந்தியாவின் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்விலாஸ் பாஸ்வானும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழர் பகுதிகளில் தனித் தமிழீழத்தை உருவாக்க அனைத்துலக சமூகம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.
“சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் 1977ம் ஆண்டிலேயே தனித்தமிழீழத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

தமிழ்மக்களின் இந்தக் கோரிக்கையை முன்வைத்து அப்போது தேர்தலைச் சந்தித்தன.
ஆனால் அவர்களின் கோரிக்கையைப் புறக்கணித்த சிங்கள அரசுகள் சிறுபான்மையினர் மீது வன்முறைகளை ஏவிவிட்டன.
ராஜபக்ச அரசினால் 2009 மே மாதம் 140,000 தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
இதற்குப் பொறுப்பான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
தமிழர் இனப்படுகொலைகளில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் - புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும்.
ஒட்டமொத்தமாக மரணதண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்பதே எமது கட்சியின் கொள்கை“ என்றும் அவர் மேலும் கூறினார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூரும் வகையில், மே 17 இயக்கம் சார்பில் நேற்று சென்னை மெரினாவில் கண்ணகி சிலை அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இங்கு ராம் விலாஸ் பாஸ்வான் நினைவு தீபத்தை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment