Friday, June 01, 2012

40 பேர் அடங்கிய படகு ஒன்று அவுஸ்திரேலியா கோகோஸ் தீவை சென்றடைந்துள்ளது!

40 பேர் அடங்கிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவைச் சென்றடைந்துள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாயன்று இந்தப் படகு கோகோஸ் தீவைச் சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரத்தில் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ள இரண்டாவது இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் குழு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து 3000 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கோகோஸ் தீவில் ஆட்கள் இல்லாத 27 சிறு சிறு தீவுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து சென்ற படகில் இணைய மற்றும் ஜிபிஆர்எஸ் வசதிகள் இருந்ததாகவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய பொலிஸார் மற்றும் சுங்க அதிகாரிகளால் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவில் குடியேறும் மக்கள் தொகை அதிகரித்துள்ள போதும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய போதிய வசதி இல்லை என அவுஸ்திரேலிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்தவர்களைத் தவிர்த்து இவ்வருடம் இதுவரை 578 பேர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் தொகை பாரியளவு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசு தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் சேம் பாரி தெரிவித்துள்ளார்.

"மென்மையான அணுகுமுறை உதவாது. அவுஸ்திரேலியா இலங்கை மீது தீவிர இராஜதந்திர அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டிய நேரம் இது" என பாரி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment