Saturday, June 23, 2012

அனைத்துலக அழுத்தங்களுக்கு அடிபணிந்தது சிறிலங்கா - ஐ.நா குழுவை அனுமதிக்க இணக்கம்


ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளையின் பணியகம் சிறிலங்காவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள அதிகாரிகள் குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்காது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
“ஐ.நா முகவர் அமைப்புகளுடன் நீண்டகாலமாக நெருக்கமான உறவுகளைப் பேணிவரும் சிறிலங்கா, ஐ.நாவுடன் சுமுகமாகப் பணியாற்றி வருகிறது. 

ஐ.நா மற்றும் ஐ.நா முகவர் அமைப்புகளுடனான இந்த நெருக்கமான உறவுகளின் அடிப்படையில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை அனுப்பத் திட்டமிட்டுள்ள குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காது.

அவர்களை சிறிலங்கா வரவேற்கும்.“ என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, நவிபிள்ளையை மட்டும் அனுமதிப்போம், வேறு எந்த அதிகாரிகள் குழுவையும் சிறிலங்காவுக்குள் அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்தது.

மேற்குலகின் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கம் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கருதப்படுகிறது.

இதேவேளை, ஐ.நா குழுவை சிறிலங்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சிங்கப் பேரினவாதக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்தநிலையில் ஐ.நா குழுவின் வருகை மீதான சிங்கள மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கிலேயே, சிறிலங்கா அரசாங்கம் மூன்று மாகாணசபைகளைக் கலைத்து தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment