Wednesday, June 27, 2012

நாம் தனித்துப் போனவர்கள் அல்ல. புலம்பெயர் தமிழ்ர் பலம் எமக்குள்ளது. எமது உரிமைகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தை கோருவோம்! மாவை சேனாதிராஜா அறிவிப்பு!!

 இராணுவத்தினதும் பௌத்த பிக்குகளினதும் ஆக்கிரமிப்புகள் முடிவுக்கு வரும் வரையில் தமிழர்களின் நிலமீட்புப் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்குமெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, விரைவில் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினைக் கூட்டி எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென சர்வதேசத்தைக் கோரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடக்கில் சிங்கள குடியேற்றம் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து நேற்றுக் காலை முறிகண்டியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் அவர் கூறியதாவது;

"பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தை விட்டு விட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து சென்றிருந்த மக்கள், யுத்தத்தின் பின்னரும் தமது சொந்த இடங்களில் வாழ முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், மக்கள் குடியேற்றப்பட்டு விட்டதாக அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் சர்வதேசத்திற்கும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் உண்மைகைளைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
பெருமளவு விவசாய நிலமும் கரையோரப் பிரதேசங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், பல இலட்சம் மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இராணுவ முகாம்களுக்காகவும், பௌத்த விகாரைகளை அமைப்பதற்காகவும் பாரம்பரியமாகவும், இனச்செறிவுடனும், சுயநிர்ணய உரிமை தத்துவத்திற்கு உரித்தான வகையிலும் வாழ்ந்து வந்த மக்களை சிதைத்துவிடவே இராணுவமும், பௌத்த பிக்குகளும் இணைந்து எமது சுயத்தை அழித்துக்கொண்டிருக்கின்றனர்.
மீள்குடியேற்றத்திற்கென அழைத்துவரப்பட்ட திருமுறிகண்டி மக்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளது. இது மட்டுமில்லை. இதுபோல இராணுவம் எங்கள் மக்களுக்குக் கொடுக்கின்ற துன்பங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. ஏன் கொண்டு சென்றார்கள் என்று கூட தெரியாத நிலையில் கொண்டு செல்லப்படுகின்றார்கள்.அந்த உரிமையினை இராணுவத்தினருக்கு யார் கொடுத்தது என்பதை கேட்க விரும்புகின்றோம்.
இவை அனைத்தையும் எதிர்த்து விரைவில் வாழ்வுரிமை மாநாட்டை அனைத்துக் கட்சிகள் சார்பானவர்களையும் இணைத்து மிகவிரைவில் எங்கள் நிலத்திற்குச் செல்லவும், ஆளவும், இராணுவம் வெளியேறவும் சர்வதேசத்தைக் கோரவுள்ளோம். இதேபோல் இந்தப் போராட்டம் முறிகண்டியுடன் நிறைவடையப் போவதில்லை, அடுத்து மன்னாரில் இடம்பெறும். அது மட்டுமல்ல வட, கிழக்கில் இராணுவ ஆதிக்கம் ஒழிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்.
நாம் தனித்துப் போனவர்கள் கிடையாது. எமக்குப் பக்கபலமாக பல இலட்சக்கணக்கில் வெளிநாடுகளில் நின்று எமது மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் தொடர்ந்து போராடுவோம். இன்னுமொரு முறை நாம் அடக்கப்பட்டுவிடாமலிருப்பதற்காக இதற்கு ஆதரவாக வெளிநாட்டு உறவுகளும் போராட வேண்டும். எங்கள் அடிப்படை உரிமையினை அங்கீகரிக்க சர்வதேசம் தயாராகும் வரை போராடிக் கொண்டிருப்போம்."
இவ்வாறு மாவை தனது உரையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment