Wednesday, June 27, 2012

குற்றத்தைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச்செயல்களில்!

கொழும்பு ஊழல் மோசடிப் பிரிவின் மூன்று புலானாய்வு உத்தியோகத்தர்கள் கப்பம் கோரலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரையும், அவரது சகோதரரையும் குறித்த பொலிஸ்  உத்தியோகத்தர்கள் கடத்தி கப்பம் கோரியுள்ளனர் 21 இலட்ச ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றம் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலும் ஓர் நபர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். உண்டியல் முறையில் வெளிநாட்டு நாணயங்களை கொடுக்கல் வாங்கல் செய்து வந்த வர்த்தகரே இவ்வாறு கடத்தப்பட்டார். வர்த்தகரும், அவரது சகோதரரும் சென்ற வாகனத்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
அந்த வாகனத்தில் இருந்த 21 இலட்ச ரூபாவினை பொலிஸ் உத்தியோகத்தர்கள் எடுத்துக் கொண்டதுடன் மேலும் 50 இலட்ச ரூபா பணத்தை கப்பமாக வழங்குமாறு கோரியுள்ளனர். 50 இலட்ச ரூபா வழங்க முடியாது என வர்த்தகர் தெரிவித்ததனைத் தொடர்ந்து கப்பத் தொகை 10 இலட்சமாக குறைவடைந்துள்ளது. பத்து இலட்சம் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக வர்த்தகரையும், அவரது சகோதரரையும் பொலிஸார் விடுதலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகரின் சகோதரர் கொழும்பு மோசடி தவிர்ப்புப் பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் 21 இலட்ச ரூபா பணத்துடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்துதல், சட்டவிரோத வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல் போன்ற குற்றச் செயல்கள் தொடர்பில் அண்மைகாலகமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த சந்தேக நபர்கள் முக்கிய பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment