Thursday, June 28, 2012

தொடரும் இராணுவத்தின் அடாவடி! வடமராட்சியில் பொது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்.

  வடமராட்சிப் பகுதியில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் தாக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இச்சம்பவம் குறித்த முறைப்பாட்டை பருத்தித்துறைப் பொலிஸார் ஏற்க மறுத்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் தலையீட்டால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
வடமராட்சி பருத்தித்துறை வியாபாரி முன்னிலையில் கடந்த
செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக நேற்று அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
"இந்தப் பகுதியில் ஆலயத் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீட்டின் முன்னாள் சிலர் நின்ற போது அவ்வீதியால் வந்த இராணுவத்தினர் ஏன் நிற்கின்றீர்கள் என்று கேட்டு அவர்களைத் தாக்கியுள்ளனர். இளைஞர்களை படையினர் தாக்கியது அறிந்து அயலவர்கள் ஓடிவந்து தாக்குதலைத் தடுத்து நிறுத்த முற்பட்ட போது அதனைத் தடுக்க முற்பட்ட வயோதிபரும் படையினரால் தாக்கப்பட்டுள்ளார்.
இராணுவத்தினர் திட்டமிட்டு வந்தே தாக்குதலை நடத்தியுள்ளனர். இல்லையெனில் வயர் கம்பிகளுடன் வந்து எவ்வாறு தாக்க முடியும்?." என பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி கேள்வியெழுப்பியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், இராணுவத்தினரின் இத் தாக்குதலில் அடிகாயங்களுக்குள்ளான நிலையில் மக்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்யச் சென்றுள்ளனர். எனினும் இங்கு முறைப்பாடு செய்யாத நிலையில் திரும்பி வீட்டிற்கு வந்து இச்சம்பவம் தொடர்பாக என்னிடம் தெரியப்படுத்தினர்.
இம் மக்களை சக்கோட்டை முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி உட்பட மூன்று இராணுவத்தினர் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று புதன்கிழமை காலை சம்பவ இடத்திற்கு சென்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துகு அம்மக்களை அழைத்துச் சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்தேன்" என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment