Tuesday, June 12, 2012

சரணடைந்த போராளிகள் காணாமற்போன விவகாரம் இறுக்கமடைகிறது! - உண்மையை கண்டறிய சிறிலங்கா செல்லப்போகிறது ஜ.நா தூதுக் குழு!

  சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி சிறிலங்கா அரசிற்கு மேலும் கிலியைக் கிழப்பியுள்ளது. அதற்காக பயண அனுமதி வேண்டுகோளையும் விடுத்துள்ளது மனித உரிமைகள் குழு. முறைப்படியான இந்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தால், மூன்றாவது தரப்பின் ஊடாக இந்தக்
கலந்துரையாடல்கள் நடத்தப்படக் கூடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் வட்டாரங்கள் கருதியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறிலங்காவிற்கான பயணத்திற்கு முன்னர் உண்மையைக் கண்டறியும் குழுவொன்றை அனுப்புவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால் இந்த வேண்டுகோள், நவநீதம்பிள்ளையின் சிறிலங்காவின் பயணத்துக்கு முன்னதாக உண்மை கண்டறியும் குழுவை அனுமதிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகள் காணாமற்போனதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இதுதொடர்பாக சாட்சியமளித்தோரிடம் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக நம்பப்படுவதாகவும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் கோரிக்கைக்கு விரைவில் பதிலளிக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைத்தல் தொடர்பில் நவனீதம்பிள்ளை விடுத்த கோரிக்கைக்கு ஒரு வார காலத்தில் பதிலளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. நவனீதம்பிள்ளை விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும், அவர் நாடு திரும்பியதன் பின்னரே பதிலளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment