Tuesday, July 03, 2012

கடனாவில் தஞ்சம் கோரிய சிறிலங்கா கடற்படை அதிகாரியை வெளியேற்றுகிறது கனடா. போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தாராம்.


போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற அடிப்படையில், கனடாவில் தஞ்சமடைந்துள்ள சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை கனேடிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
கொமடோர் நடராஜா குருபரன் என்ற சிறிலங்கா கடற்படை அதிகாரியின் அரசியல் தஞ்சக் கோரிக்கையே கனேடிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் சிறிலங்கா கடற்படையின் அட்மிரல் தரத்துக்கு மூன்று நிலைகள் கீழாகப் பணியாற்றினார்.

சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகளுக்கு உதவிய இவர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட- எண்ணிலடங்காத பொதுமக்கள் கொல்லப்பட்ட போர் முடிந்த சில வாரங்களில் � 2009 ஜுனில் ஓய்வுபெற்றிருந்தார்.
2009 ஓகஸ்ட் 4 ஆம் நாள் தனது மனைவி பாமினி குரபரன், மற்றும் இரு பிள்ளைகளாக மயூரன், கிருசாந்தி ஆகியோருடன் கனடாவில் அடைக்கலம் கோரினார். அதன் பின்னர் ரொரன்ரோவில் வசித்து வந்த இவர், சிறிலங்கா கடற்படையில் பணியாற்றிய 5 தமிழ் அதிகாரிகளில் ஒருவராவார். இவர் சிறிலங்கா அரசாங்க, அரச ஆதரவுக் குழுக்கள் மற்றும் போராளிகள் தொடர்பாக தாம் அச்சம் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் குடிவரவு அதிகாரிகள் இவர் உண்மையான அகதி அல்ல என்றும், போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர். இவரது மேன்முறையீட்டை சமஸ்டி நீதிமன்றம் கடந்த ஜுன் 13 ஆம் நாள் நிராகரித்தது. இதனால், இவரும் இவரது குடும்பத்தினரும் தற்போது சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளனர்.
சிறிலங்கா படைகள் கொடூரங்களைப் புரிந்துள்ளதை உறுதி செய்துள்ள இந்த நீதிமன்றத் தீர்ப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பத்தாயிரக்கணக்கான காணாமற் போதல்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக அறிக்கையில் அடங்கியுள்ள விரிவான சாட்சியங்களும், ஆதாரங்களும், சிறிலங்கா கடற்படையை உள்ளடக்கிய சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் சிறிலங்காவின் பரந்துபட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியான தாக்குதல்களுகு உதவியாக இருந்துள்ளது என்று தனது 50 பக்கத் தீர்ப்பில் நீதிபதி ஜோன் ஓ கீவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, சிறிலங்கா படைகள் போர்க்குற்றங்களை இந்த நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளதாவும், இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
கொமடோர் குருபரன் 1981 இல் சிறிலங்கா கடற்படையில் ஒரு மின் பொறியியலாளராக இணைந்த இவர் தாம் ஒரு தமிழர் என்பதால் பல சவால்களை எதிர்நோக்கியதாக கூறியுள்ளார். 2001 ஆம் ஆண்டில், சிறிலங்கா கடற்படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைத் தருமாறு விடுதலைப் புலிகள் கோரிய போதும் அதை தாம் நிராகரித்து விட்டதாக கொமடோர் குருபரன் தெரிவித்துள்ளார்.
பின்னர் 2008 ஆம் ஆண்டில் மீண்டும் அதே கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தான் தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் தன்னை சிறிலங்கா கடற்படையினர் புலிகளின் அனுதாபியாகவே சந்தேகித்ததாகவும், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தாம் கண்காணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற ஒரு மாதத்தின் பின்னர், சிறிலங்கா அரச ஆதரவு கருணா குழுவினரால் தனது மனைவி கடத்தப்பட்டு, பெரும்தொகையான பணத்தை கப்பமாக கோரியதாகவும், இல்லையேல் குடும்பத்தை முற்றாக அழித்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் கொமடோர் குருபரன் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் அமெரிக்கா சென்று கனேடிய எல்லையில் அடைக்கலம் கோரினார். கனெடிய குடிவரவு அதிகாரிகள் இவர் போரில் ஈடுபடவில்லை என்றும், தனிப்பட்ட ரீதியான போர்க்குற்றங்களைச் செய்யவில்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.
எனினும் இவர் சிறிலங்கா கடற்படையின் இருண்ட செற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வசதிகளை அளிப்பதில் பங்கேற்றுள்ளார், சிறிலங்கா படையினர் செய்த கொடூரங்களை அறிந்திருந்த போதும் 1985 தொடக்கத்தில் வெளிநாடு சென்ற போது கூட இவர், அதிலிருந்து வெளியேற முனையவில்லை என்று கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் மனித உரிமைகளை தொடர்ச்சியாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியாகவும் மீறிய ஒரு அமைப்பான சிறிலங்கா கடற்படையில் நீண்டகாலம் பணியாற்றியதன் மூலம் இவர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment