Thursday, July 26, 2012

போதைப் பொருள் பாவனை, பாலியல் துஷ்பிரயோகம் புலிகள் இயக்கம் இல்லாததால் தான் அதிகரிப்பு கல்வி வீழ்ச்சிக்கு காரணம்

jaffnacampasவிடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் என்று யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் தொடர் பணிப் புறக்கணிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அதன் போது கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சொன்னார் இராசகுமாரன்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மாணவர்களது கல்வி கற்பதற்கான நிலை அவர்களது எண்ணம், சிந்தனைகள் திசை திருப்பப்பட்டுள்ளன.
மாணவர்கள் மன எழுச்சியுடன் இருந்து கல்வி கற்கும் நிலை சகல வழிகளிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மீள் குடியேற்றம் செய்யப்பட்ட  இடங்களில் போதுமான வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படாததனால் அங்கு இருந்து மாணவர்கள் அமைதியாகக் கல்வி கற்கமுடியாத நிலைமை காணப்படுகிறது.
போதைவஸ்துப் பாவனை, மது பாவனை, புகைத்தல், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பினாலேயே மாணவர் கவனம் இவ்வாறு திசை திருப்பப்பட்டு கல்வி நிலையிலிருந்து பலவீனமான நிலைக்கு கொண்டு செல்கிறது. இந்தப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் பட்சத்தில் மாணவர்கள் நல்ல நிலையை அடைய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment