அ. செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள்
அன்பார்ந்த உறவுகளே!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எதிர்வரும் கிழக்குமாகாணத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அதனால் இலங்கை அரசாங்கம் ஒரு தமிழரைக் கொண்டுவந்து முதலமைச்சர் பதவியில் அமர்த்திவிட்டு, எமது பூர்வீக நிலங்களையும், இராணுவத்தின் அடாவடித்தனங்களையும்,
ஆக்கிரமிப்பையும் மேற்கொண்டு, எமது வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய பூமிகளில் எமது அடையாளத்தையே இல்லாமல் செய்கின்ற நிலையை மேற்கொண்டுள்ளது என்பது எம் எல்லோருக்கும் தெரியும்.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே இலங்கை அரசாங்கம் வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அடிமைகளாக்கப்பட வேண்டும், எமது வரலாறுகள் சிதைக்கப்பட வேண்டும் எனற நோக்கத்தோடுதான் தனது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
எமது உரிமைகளை, எமது இறையாண்மையை, வென்றெடுப்பதற்கும் எமது வாழ்வாதாரப் பிரச்சினைகளை நாங்கள் வெளியுலகிற்கு எடுத்துக் காட்டுவதற்கும் எமது செயற்பாடுகளைப் போராட்டத்தின் ஊடாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கு எமக்கு அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேவை. எனவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இன்று வடக்கு-கிழக்கில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன என்பதை ஐ.நா. சபை நிரூபித்திருக்கின்றது.
ஐ.நா.சபை கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரச்சினைகள், தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை வெளியுலகிற்குக் காட்டுகின்ற அடையாளமாக நாம் இத்தேர்தலைப் பார்க்கின்றோம்.
தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தண்டனை அனுபவிக்க வேண்டும் தனது தவறுக்கான பெறுபேறுகளை அவர்கள் சந்திக்க வேண்டும் என்ற நிலையில், எமது மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைத் தமது வாக்கு பலத்தோடு சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டி இந்த அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறியக்கூடிய வகையில் இந்தத் தேர்தலின் முடிவுகள் அமைய வேண்டும்.
இது சாத்தியப்பட வேண்டுமானால் நாம் கூடுதலான ஆசனங்களைப் பெறவேண்டும் என்பது எனது கணிப்பு. எனவே புலம்பெயர் உயர்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதற்கான உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
எம்மிடம் ஆற்றல் இருக்கிறது, மனோதிடம் இருக்கிறது, உடலில் வலு இருக்கிறது. ஆனால் இவை அனைத்தையும் கொண்டு செலுத்துவதற்கான நிதி ஆதாரம் எம்மிடம் இல்லாமல் இருக்கின்றது. புலம்பெயர் உறவுகள் நினைத்தால் நிச்சயமாக எமது இந்த நிலையை மாற்ற முடியும். எமக்கு உந்து சக்தியை அளிக்க முடியும். எமது மக்கள் கூடுதலான வாக்குகளைப் பதிவு செய்ய வைக்க முடியும். அவ்வாறு கூடுதலான வாக்குகள் பதியப்பட்டால் எமக்கு நிச்சயம் கூடுதலான ஆசனங்கள் கிட்டும்.
அந்த வகையில் நீங்கள் உங்களது உதவிக்கரத்தை நீட்டி எமது வெற்றிக்குப் பங்காற்ற வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எமது உரிமைப்போராட்டத்திற்குப் பல இலட்சங்களையும் பொருளையும் வாரிவழங்கிய பெருமை புலம்பெயர் உறவுகளைச் சாரும். அந்த உதவிகளை ஒருபோதும் தாயகம் மறக்காது.
அதனைப் போன்றே இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கும் நீங்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். உங்களது உழைப்பும் ஊக்கமும் பொருளுதவியும் நிச்சயம் எம்மை வலுவடையச் செய்யும். எமக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
தாயகத்தில் செயலாற்றுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற குடும்பத்தைப் போன்று உள்ளது. ஆகவே உங்களது ஒத்துழைப்பு இல்லாமல் இத்தேர்தலை நாங்கள் முகங்கொடுப்பது கடினம். உங்களது உதவியோடு இந்த அரசாங்கத்திற்குத் தக்க பதிலடியை வழங்கி எமது இலட்சியப் பயணத்தை மிகவும் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கூறி உங்களிடமிருந்து நிதியுதவியை நாடி நிற்கின்றோம்.
நன்றி.
அன்புடன்
அ. செல்வம் அடைக்கலநாதன்,
இணைச் செயலாளர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்.
No comments:
Post a Comment