Friday, August 03, 2012

இனப் பிரச்சினைக்கான தீர்வு வெளிநாடுகளிலிந்து வரமாட்டாது - உள்நாட்டிலேயே பேசித் தீருங்கள் எனக் கூறியுள்ளனர் பிரித்தானிய தூதுக் குழுவினர்!

இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு வெளிநாடுகளிலிந்து வரமாட்டாதென தெரிவித்துள்ள பிரித்தானிய பாராளுமன்றத் தூதுக் குழுவினர் தீர்வை உள்நாட்டினுள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணதிற்கு சென்றிருந்த குழுவினர் முன்னதாக அரச அதிபரை சந்தித்து பேசினர். பலாலிக்கு விமானப்படை விமானம் முலம் சென்று சேர்ந்த அவர்கள் அங்கிருந்து விமானப்படை உலங்கு வானூர்தி முலம் யாழ். மத்தியகல்லூரி மைதானத்தை சென்றடைந்திருந்தனர்.

வழமை போன்றே தாமதமாக வரவேற்க சென்று சேர்ந்த யாழ்.அரச அதிபருக்காக குழுவினர் காத்திருக்க வேண்டியிருந்தது. அரியாலை பகுதிக்கு வியஜம் செய்த குழுவினர் அங்கு இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் கட்டி வழங்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். அவர்கள் அவ்வேளையில் பொதுமக்களையும் சந்தித்து உரையாடினர். அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர்கள் தீர்வை உள்நாட்டிலேயே பேசி தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
அவர்கள் வணிகர் கழகம் உள்ளிட்ட தரப்புகளையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர். பலாலியில் அவர்கள் பாதுகாப்பு தரப்பினரடன் பேச்சுக்களை நடத்தியதாக கூறப்பட்ட போதும் அது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகிருக்கவில்லை.
இதனிடையே பிரித்தானிய பாராளுமன்றத் தூதுக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்றையதினம் காலை சந்தித்து உரையாடியுள்ளனர். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜேம்ஸ் வர்டன், மார்க் மென்சிஸ், அன்ரூ ஸ்டீவன்சன், எய்டன் பர்லே, கொன்னர் பேர்ன்ஸ், மெத்திவ் ஒப்ரிட், டேவிட் மொரிஸ், பொபி பிளக்மன், நிக்கொலா பிளக்மன், இயன் பேஸ்லே ஆகியோர் இந்த சந்திப்பில் இடம்பெற்றனர். ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோர்டன் தலைமை வகிக்கிறார்.
இச்சந்திப்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், சரத் அமுனுகம, கெஹெலிய ரம்புக்வெல, எஸ்.பீ. திஸாநாயக்க, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment