முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரில் தமிழர்களை முழுமையாக
அழிப்பதற்குத் துணைபுரிவதன் மூலம் சிங்களவர்களின் நேசத்துக்குரியோராக
மாறிவிடலாம் என்று இந்திய ஆட்சியாளர்கள் நினைத்து விட்டிருப்பார்கள்
போலிருக்கின்றது.
இப்போதும் கூட தன்னுடைய புவியிட முக்கியத்துவத்துக்கும் பாதுகாப்புக்கும் ஈழத்தமிழரின் ஆதரவு முக்கியமென்பதையும் ஈழத்தமிழர் வாழும் புவிப்பரப்பும் கடற்பரப்பும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு என்பதையும் இந்தியத் தலைமைகள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவே எல்லாம் என்ற கூவல் ஆபத்தானது. இது அமெரிக்காவே எல்லாம் என்பதற்குச் சமமானது.
இந்தியாவை நம்பியும் அமெரிக்காவை நம்பியுமே வன்னி இறுதிப்போர் மூர்க்கத்தனமாக மேற்கொள்ளப்பட்டு பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஈழத்தமிழர் தமது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்து முன்னெடுப்பது தவிரவேறு வழியில்லை. இந்தியாவையும் இந்தியா போன்ற வல்லரசுகளையும் உலக அரசியல் போக்குகளையும் கூர்மையாக அவதானித்து எப்படி அதைக் கையாள்வது என்ற ராஜதந்திரத்துடன் நகரவேண்டும்.
ஈழத்தமிழர், புலம்பெயர் தமிழர், தமிழ்நாட்டுத் தமிழர் ஆகிய மூன்று தரங்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்தான் விடிவுக்கு வழி. ஒவ்வொரு தரத்துக்கும் தனித்தனி கடமைகள் உண்டு. ஆனால் இந்திய சரணாகதி அரசியல் எவருடைய கடமையாகவும் இருக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்.
எந்த விடுதலை இயக்கமும் இறப்புக்களை, தியாகங்களை, அர்ப்பணிப்புக்களை, இழப்புக்களை எதிர்கொள்ளாமல் தனது இலட்சியத்தை அடையமுடியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உலகில் உள்ள எந்த விடுதலை இயக்கத்துக்கும் சளைத்ததல்ல என்று வரலாற்றில் நிரூபித்து இருக்கின்றது.
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு கடந்துபோன மூன்றாண்டுகளை மீள்பார்வை செய்தால் சில அசைவுகளைத் தவிர பெரும் மாற்றங்கள் ஏதும் மூன்று ஆண்டுகளில் நடைபெறவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் அரசுகளின் உதவியுடன் சிங்கள பாசிச அரசு ஈழத்தின் மீது ஈவு இரக்கமற்ற போரை நடத்தி முடித்தது.
விடுதலைப் புலிகளின் தலைமையையும் அவர்களின் இராணுவ சமூக அரசியல் கட்டமைப்புக்களையும் சிதைத்து அழித்து ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து பல லட்சம் மக்களை முள்வேலி முகாம்களில் சிறைப்பிடித்து இரத்த வெள்ளத்தில் ஈழம் மூழ்கடிக்கப்பட்டது. இந்தப் போரில் உடல் உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களும் அனாதையாக்கப்பட்ட பல்லாயிரம் குழந்தைகளும் விதவையாக்கப்பட்ட ஒரு லட்சம் பெண்களும் தொடர்ந்துபடும் அவலங்களும் துயர்களும் ஈரமுள்ளவர்களின் நெஞ்சுக்குலைகளை பதற வைப்பதாக இன்றும் உள்ளன.
சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை முகாம்களில் உள்ள போர்க் கைதிகள் கதி என்ன ஆயிற்று? அவர்களில் எத்தனை பேர் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்? சர்வதேச சட்டங்களும் மனித உரிமைகளும் போர்க் கைதிகள் விடயத்தில் கடைப்பிடிக்கப்பட்டதா என்று பெரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.
ஜனநாயக கம்யூனிச முகமூடிகள் அணிந்த இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா என அனைத்து அரசுகளும் தங்களுக்குள்ள முரண்பாடுகளை தள்ளி வைத்துவிட்டு ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலில் முறியடித்தன.
கடந்த ஆண்டு அமெரிக்கா சீனா முரண்பாட்டால் மீண்டும் ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்கப்பட்டுள்ளது.
தற்போது மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க எழுந்த தமிழக மக்களின் போராட்டங்கள் படிப்படியாக வடிந்து வருகின்றன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் முருகன்இ சாந்தன்இ பேரறிவாளன் போன்றவர்களுக்கான தூக்குத்தண்டனை ரத்துச் செய்ய எழுந்த எழுச்சியும் தற்காலிக ஒத்திவைப்பிற்குப் பின் தணிந்துள்ளது.
மூன்றாண்டுகள் முடிந்த பின்னும் எந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் முள்ளிவாய்க்காலுக்குள் சென்று உண்மை நிலையை அறிய முடியவில்லை என்பது யதார்த்த உண்மை. முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்று முழுமையான தகவல்கள், தகவல் தொடர்பு வசதிகள் நிறைந்த உலகில் வெளிவராமல் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன.
இந்திய இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்தவர் சதீஸ்நம்பியார். இவர் மேஜர் ஜெனரலாக இருந்த போது இலங்கையின் உயர் பாதுகாப்பு வலயங்களைப் பற்றி ஆய்வு செய்து அது பற்றி இந்தியாவுக்கு கருத்துச் சொல்வதற்காக 2003 இல் அனுப்பப்பட்டார்.
வடக்கு, கிழக்கு மக்களின் மீளக்குடியமர்வு மற்றும் அவர்களின் பாதுபாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்பது அவர் அளித்த அறிக்கையின் சாரம். இந்தச் சதீஷ் நம்பியார், இலங்கையரின் நட்பைப் பெற்ற பின் இலங்கையின் இராணுவ ஆலோசகராக பணிபுரிந்தார்.
விடுதலைப்புலிகளையும் மக்களையும் அழிக்கும் இந்தியாவின் திட்டத்தைச் செயற்படுத்தவே அவர் அங்கு அனுப்பப்பட்டார் என்பதும் இவரது சகோதரர் விஜய்நம்பியார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்புச் செயலர் என்பதும் விஜய் நம்பியார் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது கொழும்பில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்ற பின் தடயங்கள் இல்லாமல் அளிப்பதில் இந்த இரு நம்பியார்களும் பின்னிருந்து செயற்பட்டார்கள் என்பதும் உண்மை. அப்படிப்பட்ட இந்தியா பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீது அக்கறை கொள்ளும் என்பது பொய்க்கனவு.
No comments:
Post a Comment