மன்னார்
நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு
விசாரணை நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் மன்னார் நீதிமன்றம் மீது
தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு மன்னார் பொலிஸாரினாலும்
புலனாய்வுத்துறையினராலும் தேடப்பட்டு வந்த
சந்தேக நபர்களில் 11 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில்
மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக மன்னார் பொலிஸார்
தெரிவித்தனர்.கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரினால் மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதோடு பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அரச திணைக்கள பணியாளர்கள், பொலிஸ் கான்ஸ்டபில், பொது மக்கள் என 19 பேர் இது வரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரை மன்னார் பொலிஸார் தேடி வந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட 19 சந்தேக நபர்களும் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் 11 பேர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் முழுமையான வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பின் நாளை திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment