Sunday, September 23, 2012

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு

mahinda-rajapaksaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாஞ்சி பயணத்தினால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராமங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் மிக அதிகமாகக் காணப்பட்டதாக ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
போபாலுக்கும் சாஞ்சிக்கும் இடைப்பட்ட 45 கி. மீ. நீளமான பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததாகவும் குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது. சாஞ்சியிலும், போபால் தொடக்கம் சாஞ்சி வரையிலான நிலையங்களிலும் வழக்கமாக நின்று செல்லும் ௭ந்த ரயிலும் நிறுத்தப்படவில்லை. பஸ் வண்டிகள், கார்களையும் வீதிகளில் காண முடியவில்லை.

கடைகள், விடுதிகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்ட வந்ததால்தான், இந்தளவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புக் கெடுபிடி. வைகோவின் ஆதரவாளர்கள் போபால் மற்றும் அதைச் சார்ந்த பிரதேசங்களில் நுழைந்துள்ளதாக கிடைத்த தகவலால் போபால், தொடக்கம் சாஞ்சி வரையான பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. சாஞ்சியில் இருந்து கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு பொலிஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.
போபாலின் புறநகர் கிராமமான சுகிசெவனியா தொடக்கம் சாஞ்சி வரையான கிராமங்களில் இருந்த கிராமவாசிகள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வீதிக்கு வரக்கூடாது ௭ன்று அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். கிராமவாசிகளுக்கு அது மிகக் கடுமையான நேரமாக இருந்தது. நிகழ்வுக்கு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, வீதியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். போபாலுக்கும், சாஞ்சிக்கும் இடைப்பட்ட சுகிசெவனியா, சலமத்பூர், டீவங்கன்ஜ், பீர்கேடி, சோப்டாகலன், ரட்டலாய் உள்ளிட்ட பல கிராமங்களில் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
போபால் சாஞ்சி இடையே, பொதுப் போக்குவரத்து ஒருநாள் முன்னதாகவே நிறுத்தப்பட்டு விட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்தே, தனியார் வாகனங்களையும் பொலிஸார் வீதிகளில் அனுமதிக்கவில்லை ௭ன்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’ குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment