கிழக்கு
மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக்
கைப்பற்றி ஆட்சியமைக்கும். எனினும், தேர்தல் வாக்கு மோசடி எதுவுமின்றிச்
சுதந்திரமான முறையில் நடைபெறுமா என்பதுதான் கேள்விக் குறியாகவுள்ளது.
வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற அனைவரும் ஒத்துழைத்தால்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெறும்;. நாளை (இன்று) அதிகாலை வேளை
மகிழ்ச்சியான செய்தி எமது தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைக்கும்
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் தினமான நேற்றுத் திருகோணமலை புனித மரியாள்
கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்துக்குக் கொட்டும்
மழைக்கு மத்தியிலும் சென்று வாக்களித்துவிட்டு வெளியில் வந்து ஊடகவியலாளர்
மத்தியில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கிழக்குத் தேர்தலின் போது சுதந்திரமான வாக்களிப்புக்கான அனைத்துப்
பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் திணைக்களம் செய்துள்ளது என தேர்தல்
ஆணையாளர் எமக்குக் கடிதம் மூலம் உத்தரவாதம் வழங்கியுள்ளார். எனினும், இங்கு
வாக்கு மோசடிகள் இடம்பெறக் கூடிய சூழல் இருப்பதாக எமக்குத் தகவல்
கிடைத்துள்ளது.
எனவே, இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்கு மோசடி எதுவுமின்றி சுதந்திரமான
முறையில் நடைபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றியடையும்.
தமிழ் பேசும் வாக்காளர்கள் கூட்டமைப்பின் பின்னாலே அணிதிரண்டு உள்ளனர்.
நாமே அதிக ஆசனங்களைப் பெறுவோம். இதனூடாகச் சர்வதேசத்துக்கு எமது மக்கள்
நல்லதொரு செய்தியைத் தெரியப்படுத்துவார்கள் என்றார்.
No comments:
Post a Comment