Sunday, September 09, 2012

சிறிலங்கா அதிபரின் கோரிக்கையை இந்தியா நிராகரிப்பு

புத்தரின் எலும்புகள் அடங்கிய கபிலவஸ்து புனித சின்னத்தை அலரி மாளிகையில் வைத்து வழிபடுவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை, இந்தியா நிராகரித்துள்ளது.

அண்மைய தமிழ்நாட்டு நிலவரங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு இது மற்றொரு அடியாக விழுந்துள்ளது.


அலரி மாளிகையில், கபிலவஸ்து புனித சின்னத்தை வழிபாட்டுக்காக வைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மூலம் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கபிலவஸ்து புனித சின்னத்துக்கான வரவேற்பை அடுத்து இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா அளித்த இராப்போசன விருந்தின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்த வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

இந்தியத் தூதுவரிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தியிருந்தார்.

புனித சின்னங்களை மேலும் ஒரு வாரத்துக்கு சிறிலங்காவில் வைத்திருப்பதற்கு அனுமதிக்க வேண்டும், அதிகளவு இடங்களில் அதனை வழிபாட்டுக்கு வைக்க அனுமதிக்க வேண்டும், அலரி மாளிகையில் வழிபாட்டுக்காக வைக்க அனுமதிக்க வேண்டும் ஆகியனவே அந்தக் கோரிக்கைகளாகும்.

இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, இதுபற்றி புதுடெல்லிக்கு அறிவித்திருந்தார். அதற்கு புதுடெல்லி உடனடியாகவே பதில் அனுப்பியுள்ளது.

அதன்படி முதல் இரு கோரிக்கைகளுக்கும் எதிர்ப்பு ஏதுமில்லை என்றும், அலரி மாளிகையில் புனித சின்னத்தை வழிபாட்டுக்கு வைக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் புதுடெல்லி அறிவித்துள்ளது.

அலரி மாளிகை ஒரு வழிபாட்டு இடமல்ல என்றும், அது சிறிலங்கா அதிபர் அல்லது பிரதமரின் வசிப்பிடமாக இருப்பதாலேயே அங்கு புனித சின்னங்களை வைக்க அனுமதிக்க முடியாது என்று இந்தியா கூறியதாகவும் இந்தியத் தூதரக வட்டாரங்கள் கூறியுள்ளன.

எனினும் இந்திய அரசின் இந்த முடிவில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீடு இருப்பதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.source : pthinapalkai

No comments:

Post a Comment