புதுக்குடியிருப்பு
மந்துவில் கிராமத்தில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட வளவொன்றிலிருந்து
பெருமளவு வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் தறப்பாளால் மூடப்பட்ட தற்காலிகக்
குடிசைகளிலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல்
வேளையில் குடும்பமொன்று தமது குடிசை அமைந்துள்ள காணியைத் துப்புரவு
செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பற்றைக்கு வைக்கப்பட்ட
நெருப்புக்குள்ளிருந்து வெடியோசை கேட்டது அத்துடன் புல்லை வெட்டும்போது
மிதிவெடியொன்றும் வெளியே தெரிந்தது.
இதனால் அச்சமடைந்த அந்தக் குடும்பத்தினர் இது தொடர்பாக அருகிலுள்ள
இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கினர். உடனடியாக அங்கு வந்த இராணுவத்தினர்
அந்தக் குடும்பத்தினரை வெளியே செல்லவேண்டாமெனக் கூறிச் சென்றனர்.
நேற்றுக் காலை மீண்டும் அங்கு வந்த இராணுவத்தினர் அந்த வளவுக்குள்
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பட்ட மரமொன்றைச் சுற்றி ஏராளமான
மிதிவெடிகள் காணப்பட்டன. வேறு சில இடங்களிலும் இவை காணப்பட்டன. இவற்றை ஒரு
உரப்பை நிறைய இராணுவத்தினர் சேகரித்துச் சென்றனர்.
மேலும் ஒரு ஷெல் குண்டு, நான்கு கிரனைட் குண்டுகள் என்பனவும் அங்கு மீட்கப்பட்டன.
இவை மீட்கப்பட்டது தொடர்பாக வெளியில் எவருக்கும் தெரிவிக்க
வேண்டாமெனக் கூறிய இராணுவத்தினர் தொடர்ந்தும் அங்கு நிற்பதைக் காண
முடிந்தது.
இதனைக் கேள்விப்பட்ட ஏனைய மீள்குடியமர்ந்த மக்கள் அச்சத்துடன் உள்ளமையையும் அவதானிக்க முடிந்தது.
No comments:
Post a Comment