Monday, October 15, 2012

ஈழத்தமிழர்கள் மீது சிறிலங்கா அரசின் மனிதவுரிமை மீறல், இனப்படுகொலைகளைக் காட்டும் “தமிழினப் படுகொலைகள்” நூல் ஜெர்மனியில் வெளியீடு

9b5dbddfac79f6134182c68260b5f926ஈழத்தமிழர்கள் மீது சிறிலங்கா அரசின் படைகள் அரங்கேற்றிய மனிதவுரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகள் என்பன உள்ளடக்கிய ஆவணத் தொகுப்பாக “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல், ஜெர்மனியில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் “நெசோர்” என அழைக்கப்படும் வடக்கு கிழக்கு மனித உரிமை செயலகம் தொகுத்து வெளியிட்ட குறித்த நூல் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இன்று ஜெர்மனியில் பிராங்க்போர்ட் நகரில் வெளியிடப்பட்டுள்ளது.
இப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக, இந்நூலை யேர்மன் மொழியில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் பீற்றர் சால்க், இந்நூலை அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் தமிழ் மக்கள் சார்பாக செல்வி லக்சி லம்பேர்ட் மற்றும் ரொபின்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது நடாத்திய மனிதவுரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகள் இந் நூலில் ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வாறன குற்றங்கள் புரிந்த இலங்கை அரசை சர்வதேச சட்டங்களுக்கு அமைய அனைத்துலக குற்றவியல் மன்றத்தில் நிறுத்த முடியும் என பேராசிரியர் பீற்றர் சால்க், இவ் ஆவணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகள் இன்று வரை அனைத்து நாட்டு மக்களும் ஆதாரப்படுத்தப்பட்ட வகையில் சென்றடையவில்லை.
அதனால் இன்று வெளியிடப்படும் இந்நூலை மிக முக்கியமான ஒரு ஆவணமாக கருதுகின்ற வேளையில், இந்நூலை உருவாக்குவதற்கு தமது உயிர்களை அர்பணித்தவர்களை நினைவில் பதித்து இதை யேர்மன் மொழியில் வெளியிட்டு வைப்பதற்கு மிக பெரும் உதவியை செய்த பேராசிரியர் பீற்றர் சால்க், அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் மற்றும் பெயர் குறிப்பிட்ட முடியாத அனைவருக்கும் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ரொபின்சன் தெரிவித்தார்.
அத்துடன், சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட இனப்படுகொலையை செய்து வருகின்றமையை இந்நூல் ஆதாரத்துடன் வெளிக்காட்டுகின்றது எனவும் ரொபின்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நூல் ஜெர்மனியில் உள்ள நூல்நிலையங்களுக்கும், உயர்கல்விக் கூடத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும், மனிதவுரிமை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் புலம்பெயர் நாடுகளில் புகலிடத் தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் கொடுமைக்களை புகலிட நாட்டு அரசாங்கத்திற்கு ஆதாரத்துடன் கொடுப்பதற்கும் இந் நூல் மிக முக்கியம் வாய்ந்ததாகும் எனவும் வெளியீட்டார்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment