Monday, October 01, 2012

நாங்கள் இப்போது அகதி இல்லையா? கோத்தாவிடம் கேப்பாபிலவு, வலி.வடக்கு மக்கள் கேள்வி

kepஎங்களது சொந்த நிலங்களில் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு இன்னமும் அகதி முகாம்களிலேயே, வேறு இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளோம். 
இப்போதும் நாங்கள் அகதிகள்தான். எங்களுக் கான எந்த வசதிகளும் கிடையாது. இவ்வாறான நிலையில் அகதிகள் என்று இலங்கையில் யாரும் கிடையாது என்று அரசு கூறியிருப்பது உலகை ஏமாற்றவே.
இவ்வாறு வேதனையோடு தெரிவித்தனர் வலி. வடக்கு மற்றும் கேப்பாபிலவு மக்கள். ஏறக்குறைய 25 வருடங்களுக்கும் மேலாக சொந்த இடங்களில் இருந்து துரத்தப்பட்ட 1,208 குடும்பங்களைச் சேர்ந்த வலி.வடக்கு மக்கள் இன்னமும் மீள்குடியமர அனுமதியின்றி அகதி முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.
இதுகுறித்து தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கிளிநொச்சி ஜெயந்தி நகரில் சிறுவர் இல்லத்தை திறந்து வைத்துப் பேசிய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போர் காரண மாக தமது சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்த அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டார்கள்.
இப்போது இலங்கையில் அகதி என்று எவருமே கிடையாது என்று கூறியிருந்தார். இன்னமும் அகதி முகாம்களிலும், சொந்த இடங்களற்ற வேறுபகுதிகளிலும் அல்லல்படும் ஆயிரக்கணக்கான மக்களை கோத்தபாயவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.
“அகதிகள் எல்லோரும் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர் என்று அரசு தெரிவித்திருக்கிறது. அப்படியானால் எங்களுடைய மீள்குடியேற்றம் கிடப்பில் போடப்பட்ட விடயமாகிவிட்டதா? உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் எங்களது நிலங்களை நிரந்தரமாகத் தனது பிடிக்குள் வைத்திருக்க படைத்தரப்பு நினைக்கிறது.
அதனாலேயே எல்லோரும் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக உலகுக்குக் கூறி, மீளக்குடியேற வேண்டிய எங்களது பிரச்சினையை அரசு மூடி மறைத்துள்ளது.”  என்று வலி.வடக்கு மக்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று, தமது சொந்த நிலத்தில் குடியேற கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களுக்கும் அரசு அனுமதி மறுத்து அவர்களை எந்தவித அடிப்படை வசதிகளும் அற்று சூரியபுரம், சீனியாமோட்டை போன்ற வேற்றிடங்களிலேயே தங்க வைத்துள்ளது. குறித்த பகுதிகளில் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
குளியல், சமையல் முதலான தேவைகளுக்குக் கூட இங்கு தண்ணீரைப் பெறமுடியாதுள்ளது. இதனால் நாலைந்து நாள்களுக்கு மேலாக குளிக்காமலேயே இந்த மக்கள் அவலப்படுவதாகத் தெரிவித்தனர்.
“எங்களை இருமாதங்களுக்கு தற்காலிகமாகவே இங்கு தங்கியிருக்குமாறும் அதன்பின்னர் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவோம் என்றும் உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது. இப்போது அரசு சொல்வதைப் பார்க்கும்போது எங்களுடைய மீள்குடியேற்றமும் அதோகதிதான் என்றே படுகிறது. மழைக்கும் வெயிலுக்கும் நடுவில் ஆயுள் முழுக்க இங்கேயே நாங்கள் அல்லாட வேண்டியதுதான் போலும்.”
இவ்வாறு கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக அவலப்பட்டு வரும் நிலையில் உலகை ஏமாற்றுவதற்காகவே அரசு இப்போது அகதிகள் யாரும் இல்லை என்று பொய்ப்பிரசாரம் மேற்கொள்வதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கேப்பாபிலவு பகுதிக்கு நேற்று சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த செ.கஜேந்திரன் ஆகியோர் அங்கு அடிப்படை வசதிகள் எதுவுமின்றித் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பண உதவி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் என்பவற்றை வழங்கினர்.

No comments:

Post a Comment