Tuesday, October 02, 2012

இலங்கையுடனான இந்திய நல்லுறவு தொடரும் என்கிறார் இந்திய தூதுவர் அசோக் கே காந்தா

ashok_kanthaaஇலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளும், நல்லுறவும் தொடரும் என்று, இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து அவர், இலங்கையில் மேற்கொள்ளப்படும் இந்திய உதவித்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்,
இலங்கையுடனான இந்தியாவின் உறவு வரலாறு, கலாசார ரீதியாக வலுப்பெற்று வந்துள்ளது.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது போன்றவற்றில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

வீட்டு வசதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்தியா நடவடிக்கை எடுத்தது.
தற்போது இரண்டாவது கட்டமாக 43 ஆயிரம் பேருக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க இந்தியா நிதியுதவி வழங்குகிறது.
இந்த நிதி பயனாளிகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த நிதியை அவர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்டறிய தனி செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டு, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதுடன் மட்டுமின்றி, அங்குள்ள மக்களின் பொருளாதார உயர்வுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி விமானத் தளத்தை குடியியல் விமான நிலையமாக மாற்ற இந்தியா தயாராக உள்ளது.
ஆனால், அதற்கு இலங்கை அரசு தான் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது.
அதற்குக் காரணம் சரியான திட்டமிடல் இன்றி தொடங்கப்பட்ட சேவைதான்.
1,100 பயணிகள் செல்லும் வகையில் சொகுசு கப்பல் சேவை அறிமுகமானது.
அதற்கு பொது மக்களிடையே வரவேற்பு இல்லை. அதனால் சிறிய வடிவில் 400 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் சேவை இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது.
அது குறித்து புதிய சேவையாளர்களை ஈர்ப்பதற்காக சில நிறுவனங்களுடன் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை பேச்சு நடத்தி வருகிறது.
கொழும்பில் இருந்து தலைமன்னார் வரை தொடருந்து போக்குவரத்து சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் 2013ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் கப்பல் சேவை மூலம் இணைத்து இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவுப்பாலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவுடன் உள்ளது.
தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்பு சிறிலங்கா சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது துரதிருஸ்வடவசமானது.
இரு நாடுகளிடையிலான உறவுகளை உள்விவகாரங்களை வைத்து ஒப்பிடக் கூடாது.
இந்த விவகாரத்தில் தெளிவான பார்வையுடன் விரிவான முறையில் இந்தியா பார்க்கிறது.
அதனால், வரும் காலங்களிலும் இலங்கையுடனான பாதுகாப்பு நல்லுறவு தொடரும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

No comments:

Post a Comment