Monday, October 15, 2012

தமிழ் சமூகத்தை திட்டமிட்டு அழிப்பதற்கே பரம்பரைக் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன; அச்சம் வெளியிடுகிறார் மன்னார் ஆயர்

joஎமது பரம்பரைக் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவது தனிநபர் பிரச்சினை அல்ல. இது பெரும் சமூகப் பிரச்சினையுமாகும். எமது சமூகமே இதனால் அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது. இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளார் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை. 
உணவு, தன்னாதிக்கத்தை பாதுகாப்பதற்காகவும் மக்கள் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்குடன் காணி கொள்கைக்கு எதிரான தேசிய எதிர்ப்பு வாரம்  மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மன்னார் ஞானோதயத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
மக்களின் தனித்துவம், சுதந்திரம் அனைத்தும் சூறையாடப்படுகின்றன. காணிகளைத் தாம் நினைத்தவாறு அபகரிப்பது மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
பரம்பரை பரம்பரையாக எமது மக்கள் ஆண்டு, அனுபவித்த காணிகளை அரசு அபகரித்து வருகிறது. இது எங்கள் சமூகத்தை கூண்டோடு அழிக்கும் செயல். இதே போலவே கல்வித்துறையிலும் மறைமுகமான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இங்கே நடைபெறுவது தனிநபர் பிரச்சினை என்றோ, ஒரு பகுதி மக்களின் பிரச்சினை என்றோ பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் பிரச்சினையாக உருமாறி வருகிறது.
வெறும் காணி மட்டும் தானே பறிபோனால் போகட்டும் என்பது வேறு. இதனால் எமது சமூகம், இனம் அழிந்து போகும் பேரபாயம் தோன்றி உள்ளது. இப்பகுதியில் பரம்பரையாக வாழ்ந்த மக்கள் மீளக்குடியமர்ந்து வாழ முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களது உரிமைகளை வேறுயாரோ அனுபவிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மன்னார் முள்ளிக்குள மக்கள் அந்தப் பிரதேசத்தில் பரம்பரையாக வாழ்ந்தவர்கள் அந்தக் கிராமத்தின் பழைமை வாய்ந்த குடிமக்கள். ஆனால் அவர்கள் தற்போது வசதிகள் அற்ற காட்டுப் பிரதேசத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று ஆயர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment