Tuesday, December 04, 2012

யாழ் பல்கலைக்கழக மாணவர் மீது வன்முறை கனடிய மாணவர் சமூகம்; கடும் கண்டனம்

kanada-293x150யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மீது சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டித்து கனடிய மாணவர் சமூகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் அதனை உடன் நிறுத்துமாறு சிறீலங்காவை வேண்டியுள்ளதுடன் மேற்கொண்டும் இவ்வாறு நடக்காது கண்காணிக்குமாறு சர்வதேச சமுகத்தையும் வேண்டியுள்ளனர்.
54 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் யோர்க் பல்கலைக்கழக மாணவர் சபை ரொரன்ரோ ஸ்காபுரோ மாணவர் சபை யோக் பல்கலைக்கழக இந்திய கலாச்சார அவை ஆகியன தமது கடும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ள அதே வேளையில் கனடாவின் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அவைகளும் தமது தாயக உடன்பிறப்புக்களுக்காக உரிமையுடன் கைகோர்த்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

அதேவேளை பெயர்ந்த ஈழத்தமிழ் மாணவர்களை ஒருங்கிணைக்கும் உலகளாவிய இளையோர் தமிழர் அவையும் தனது கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வவையில் அவுஸ்திரேலியா முதல் கனடா வரை 9 நாடுகளின் தமிழ் மாணவர் அமைப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
மனிதர்களின் அடிப்படை உரிமைகளான சுய கருத்துக்களை வெளியிடுதல் அமைதியாக சுயமாகக் கூடுதல் போன்ற உரிமைகளை சிறீலங்கா அரசு யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகத்திற்கு மறுத்துள்ளதுடன் அவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது என அனைத்து அறிக்கைகளும் சிறீலங்கா அரசை வண்மையாக சாடியுள்ளன.
அதேவேளை தமிழர் தேச மக்கள் மீதான சிறீலங்கா அரச வன்முறைகள் தொடர்வதை இத்தாக்குதல் மேலும் வெளிக்காட்டி நிற்பதாக கூறும் கனடிய மாணவர் சமூக அறிக்கைகள் தமிழ் மக்களைக் காக்க சர்வதேச சமூகத்தை உடன் செயற்படுமாறும் வேண்டியுள்ளன.
அதேவேளை சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழர் தாயகமே ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வாகும் என்பதை வலியுறுத்தியுள்ள அறிக்கைகள் அத்தீர்விற்காக விரைந்து செயற்படுமாறு சர்வதேச சமூகத்தையும் வேண்டியுள்ளன.
சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ள மாணவர் சமூகப் பிரதிநிதிகளை உடன் விடுதலை செய்யுமாறு வேண்டியுள்ள கனடிய மாணவர் சமூகம் அதனை உறுதிப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தையும் வேண்டியுள்ளது. அதேவேளை இவ்விடயத்தை சர்வதேச மயப்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களிலும் இறங்கியுள்ளதாக கனடிய மாணவப்பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment