
இதுபற்றிய தகவல்கள் நேற்று கனடாவின் நசனல் போஸ்ட் நாளிதழில், வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இன்று அதிகாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையிலேயே, கப்டன் வடுதுர பண்டாரகே ஒரு மோசடியான நபர் என்றும், தனது புகலிடக் கோரிக்கையை கனடிய அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதற்காக பொய் கூறியுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது.
“தற்காப்புக்கலைஞரான இவர் உள்ளூரிலும் அனைத்துலக அளவிலும் நடைபெறும் போட்டிகளில் சிறிலங்கா இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, 1993ம் ஆண்டில் ஒரு 2வது லெப். அதிகாரியாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இவர், சர்ச்சைக்குரிய ஒரு அதிகாரியாகவே இருந்து வந்தார்.
பதவிஉயர்வு பரீட்சைகளில் மோசடி செய்தும், ஏனைய செயற்பாடுகளின் மூலமுமே இவர் ஒரு அதிகாரியானார்.
அனுமதியின்றி விடுப்பில் செல்வது இவருடைய பழக்கமாகவே இருந்தது.
நீண்டகாலம் விடுப்பில் இருந்த அவர் சிறிலங்கா இராணுவத்தில் இருந்தும் நீக்கப்பட்டார்.
மனிதாபிமானப் போரின்போது அவர் போர் நடந்த பிரதேசங்களுக்கு அண்மையில் எங்குமே அவர் பணியாற்றவில்லை.
2006 தொடக்கம் அவர் தப்பிச்செல்லும் வரை, கொழும்பைச் சுற்றிய பகுதிகளிலேயே பணியாற்றியுள்ளார்.
தமிழ் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் குண்டுவைக்குமாறு தனக்கு ஒரு கேணல் உத்தரவிட்டதாக இவர் கூறியுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவேயில்லை.
கனடாவில் புகலிடம் பெறுவதற்காக, அவர் அங்குள்ள அதிகாரிகளை முட்டாளாக்குவதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இவர், அனைத்துலக போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காகவே சிறிலங்காவை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
கொழும்பில் இருந்தபோது, இவர் நிர்வாகப் பணிகளிலேயே பெரும்பாலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தாரே தவிர, நடவடிக்கை விவகாரங்களில் குறிப்பாக தேடுதல்கள், சுற்றிவளைப்புகளில் ஈடுபடுவதற்கான ஆணை வழங்கப்படவில்லை.
பெரும்பாலான நேரங்களில் இவர் தற்காப்புக்கலை பயிற்றுனராகவே இருந்தார்.” என்றும் கூறியுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, வழக்கம் போலவே விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்திகளால் இவர் சிறிலங்காவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
No comments:
Post a Comment