Monday, December 03, 2012

சன்சீ கப்பலில் சென்ற இலங்கையர்கள் சிறைக் கைதிகள் போலவே நடத்தப்படுகிறார்கள்!– லண்டன் கார்டியன்

mvsunsea_092010ம் ஆண்டு கப்பலில் கனடாவிற்குச் சென்ற 492 அகதிகளில் சிலர் இன்னமும் சிறைக்கைதிகளாக இருப்பதாகவும் பலரும் சிறைக்கைதிகள் போலவே நடத்தப்பட்டதாகவும் இங்கிலாந்துப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
கனடாவில் தங்களிற்கு ஒரு நல்வாழ்க்கை கிடைக்குமென சரக்குகளை ஏற்றும் சன்சீ என்ற கப்பலில் பயணித்து கனடா வந்த 492 அகதிகளும் அரசியல் இலாபங்களிற்காவும் தமது திட்டங்கைள நிறைவேற்றுவதற்காகவும் கனடாவால் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் தாராள மனப்பான்மையை பாவித்து சர்வதேச சட்டங்களையெல்லாம் மீறி இந்த அகதிகள் வந்துள்ள விவகாரத்தையடுத்து கனடிய அதிகாரிகள் எங்களது சட்டதிட்டங்களையெல்லாம் இறுக்கமாக மாற்றுவார்கள் என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் தெரிவித்ததை மேற்படி கூற்றுக்கு ஆதாரமாக மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.

கனடிய அரசு பிரிட்டிஸ் கொலம்பியா மாகணச் சிறைகளில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவரையும் மாதக்கணக்கில் அடைத்து வைத்திருந்ததாகவும் பலர் தற்போதும் அச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரையும் வெவ்வேறு பகுதிகளில் அடைத்து வைத்திருப்பதாகவும், ஆண்களை சிறைச்சாலை நிலையம் ஒன்றிலும் பெண்களை பிறிதொரு சிறைச்சாலையிலும், சிறார்களை இளைஞர், சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றிலுமாக வேறு வேறு இடங்களில் தடுத்து வைத்தது பெருத்த மன உளைச்சலைக் கொண்டுவந்திருக்கும் என்கிறார் அகதி விவகாரத்தில் அக்கறையுள்ள ஒருவர்.
ஏறக்குறைய சிறைக்கைதிகளாகவே நடத்தப்பட்ட இந்த அகதிகள் ஒரு பகுதியில் இருந்து மற்றப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லையென்றும், அவர்களிற்கு காவலர்கள் கண்காணிப்பு எப்போதுமே தொடர்ந்தது எனவும், கமிரா மூலமான கண்காணிப்பு பலமாக இருந்ததாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கனடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் கருத்துக்களை கேட்டறிய மேற்படி பத்திரிகை முயன்ற போதும் மேற்படி பிரிவினர் அவர்களது கோரிக்கைக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
தற்போதைய நிலைவரப்படி 492 அகதிகளில், 28 பேர் அகதிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர், 43 பேரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இதைவிட 23 பேர் தங்களது அகதிக் கோரிக்கை மீளப்பெற்று விட்டனர். மிகுதி நபர்களிற்காக விசாரணை நிலுவையிலுள்ளது. இரண்டு கப்பற் சிப்பந்திகளும், இரண்டு பயணிகளும் இன்னமும் தடுத்தே வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment