Tuesday, January 15, 2013

பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய கப்பல் மீட்கப்பட்டது! 1 வாரத்துக்கு ரயில் சேவைகள் ரத்து!

13-bamaban-ship-300ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய கடற்படைக் கப்பல் விசைப்படகுகள் உதவியுடன் மீட்கப்பட்டது. இருப்பினும் ரயில் பாலம் சேதமடைந்திருப்பதால் ஒரு வார காலத்துக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் பாம்பன் அருகே தரை தட்டியது. கடந்த சில நாட்களாக கடற்பரப்பில் தத்தளித்த இந்த கப்பலை இழுக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அலைகளில் கப்பல் இழுக்கப்பட்டு நேற்று பாம்பன் ரயில் பாலம் அருகே நின்றது. பாம்பன் ரயில் பாலம் அருகே தத்தளித்துக் கொண்டிருந்த இந்த கப்பல் இன்று நூற்றாண்டு பழமை வாய்ந்த பாலத்தின் 24-வது தூணின் மீது மோதியது.
இதில் தூண் சற்று திரும்பியுள்ளது. இதனால் அந்த பாலம் வழியேயான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை புறப்படுவதாக இருந்தது.
அது ரத்து செய்யப்பட்டது. மேலும், ராமேஸ்வரம் வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. மண்டபம் ரயில்நிலையத்தில் நிறுத்த இயலாத நிலையில் ராமநாதபுரத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் நேரத்தில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சக்தி வாய்ந்த 6 விசைப்படகுகளின் உதவியுடன் பாலத்தில் மோதிய கப்பல் கடற்பரப்புக்குள் இழுத்து செல்லப்பட்டது. இருப்பினும் ரயில் பாதையை தற்காலிகமாக சரி செய்ய ஒரு வார காலமாகும் என்றும் ஒரு வார காலத்துக்கு ரயில்கள் இயக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பாலத்தை முழுமையாக சீரமைக்க இரண்டு மாதங்களாகும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
13-bamaban-ship-300

No comments:

Post a Comment