பிரதம
நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் பற்றி கனடா இன்று விசனம்
தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய
அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு ஆகியவற்றில் எடுக்கவுள்ளதாவும் கனடா
கூறியுள்ளது.
பெருமளவில் அரசியல் மயமாக்கப்பட்டதாகவும் வெளிப்படைத் தன்மை
இல்லாததாகவும் நீதியான விசாரணைக்கான உத்தரவாதம் அளிக்கப்படாததாகவும்
காணப்பட்ட குற்றப்பிரேரணை செயன்முறையால் பிரதம நீதியரசரை ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ பதவியிறக்கியதையிட்டு கனடா பெரிதும் விசனமுற்றிருப்பதாக கனேடிய
பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.நாட்டின் அரசியலமைப்பையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் மதிக்க வேண்டும் எனவும் உடனடியாக அரசாங்கம் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நாம் அரசாங்கத்தை கேட்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசனங்களை நேரடியாக இலங்கையுடனும் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் ஆகிய அரங்கங்களில் தீர்மானங்கள் வழியாகவும் நாம் தொடர்ந்து கிளப்பி வருவோம் என கனேடிய பிரதமர் கூறியுள்ளார்.
பொதுநலவயத்தின் அமைச்சர் மட்ட நடவடிக்கை குழுவில் மிகவும் கவலை தரும் இந்த புதிய நிலைமை பற்றி நாம் பிரஸ்தாபிக்கவுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment