Monday, January 14, 2013

விவசாயிகள் துயரம் தீரட்டும், தமிழ் மண் செழிக்கட்டும்: நாம் தமிழர் கட்சி பொங்கல் வாழ்த்து

namthamilar-Logoதமிழரின் தொன்மைமிக்க வரலாற்றிலும், இன்றளவும் அவர்களின் வாழ்வில் மகிழ்வுடனும், பெருமையுடனும் கொண்டாடப்படும் திருநாளாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முதுமொழி தமிழரின் செம்மாந்த வாழ்வின் சான்றாக இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால், நிலத்தினை உழுது, பயிர் செய்து வாழும் தமிழ்நாட்டின் விவசாயியின் வாழ்க்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருளடைந்து, அவர்களின் வாழ்கையே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று பொங்கல் தினத்தை, தை பிறப்பை எதிர்நோக்கி தமிழினம் உள்ளது.


கர்நாடக அரசின் அடாவடித்தனத்தால் காவிரி நதியில் தமிழ்நாட்டிற்குரிய நீர் கிடைக்காமல் போய்விட்டது. நியாயமாக தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பங்கை பெற்றுத் தர மனமில்லாத அரசாக மத்திய அரசு பாராமுகமாக நடந்துகொண்டது. இதன் விளைவாக, முதலில் குறுவையும், இப்போது சம்பா, தாளடி சாகுபடியும் பொய்த்துப்போய், சோறுடைத்த சோழ வள நாடு என்ற வரலாற்றில் புகழ்பெற்ற தஞ்சை மண்டலம் இன்று நீரின்றி வறண்ட நிலங்களாக திரிந்துவிட்டது. புதிதாக அறுவடை செய்த நெல்லைக் கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு தை பிறப்பை கொண்டாடிய தமிழ்நாடு, இன்று அறுவடை செய்ய நெல்லின்றி, நொந்த உள்ளத்தோடு தைத் திருநாளை ஏமாற்றத்துடன் பார்க்கிறது.

கை நிறைய காசுடன் வீட்டுத் தேவை அனைத்தையும் வாங்கிக் களிக்கும் தமிழ்நாட்டின் விவசாயி இன்று தனது வேளாண்மை பொய்துவிட்டதற்கு இழப்பீடு கேட்டு அரசிடம் கையேந்தும் நிலையில் நிற்கும் வேதனையாக சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலைக்கு தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்வெட்டும் ஒரு முக்கிய காரணமென்பதை மறுப்பதற்கில்லை. ஏக்கருக்கு ரூ.25,000 கொடு என்று கோரி தஞ்சை தரணி விவசாயிகள் சாலைக்கு வந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் வேதனையை போக்க தமிழக அரசு, அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களின் துயரை துடைக்க வேண்டும். இயற்கை பாதி பொய்தது, கிடைத்த நீரை நமக்குத் தர கர்நாடகம் மறுத்தது. வலியுறுத்திப் பெற்றுத் தர வேண்டிய நடுவன் அரசு பாராமுகம் காட்டி தமிழனின் வயிற்றில் அடித்தது. இதில் உழவனின் பிழை ஏதுமில்லை என்பதை உணர்ந்து தமிழக அரசு அவர்களுக்கு தாராளமாக உதவ வேண்டும்.

தமிழக அரசு செய்யும் இந்த உதவி, இதற்கு மேலும் எந்த ஒரு உழவனும் தற்கொலைக்கு முயற்சிப்பதை தடுப்பதாக இருக்க வேண்டும். மகிழ்ச்சி பொங்க கொண்டாட வேண்டிய பொங்கல், கண்ணீர் பொங்கலாக மாறிவிட்ட நிலையில், இனி வரும் காலம் நம் இனத்தின் விடியலுக்கான வெளிச்சத்தை தரட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் மக்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

LTTE

No comments:

Post a Comment