Wednesday, January 09, 2013

பிரிட்டனில் நேபாள ராணுவ அதிகாரி கைது: மனித உரிமை அமைப்புகள் வரவேற்பு

kumarLama_371409cநேபாளத்தில் அப்பாவிகளைச் சித்திரவதை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் ராணுவத் தளபதி லாமாவை பிரிட்டன் அரசு கைது செய்துள்ளதை நேபாள மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.
நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை ஒடுக்க அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை எடுத்தது. அந்தக் காலகட்டத்தில் சந்தேகத்துக்கு இடமானவர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர்.

அவ்வாறு, 2005ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட நபர்களைச் சித்திரவதை செய்ததாக நேபாள ராணுவ உயரதிகாரி லாமா(46) என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிரிட்டனில் தங்கியிருந்த அவர் மீது, பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான ராவத் என்பவர் சமீபத்தில் போலீஸôரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, பிரிட்டனின் செயின்ட் லெனார்ட்ஸ் ஆன் சீ நகரில் தங்கியிருந்த லாமாவைக் கடந்த 3ஆம் தேதி போலீஸôர் கைது செய்தனர். பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கையை லண்டனை அடிப்படையாகக் கொண்ட ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு வரவேற்றுள்ளது. அதன் ஆசிய-பசிபிக் மண்டல துணை இயக்குநர் பாலி டிரஸ்காட் வெளியிட்ட அறிக்கையில், “மனிதர்களைச் சித்திரவதைக்கு உட்படுத்துவதை எதிர்ப்பதில் தனது சர்வதேசக் கடமைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதை, லாமா கைதின் மூலம் பிரிட்டன் உணர்த்தியுள்ளது.
வரவேற்கத்தக்க இந்த நடவடிக்கையானது, நேபாளத்தில் சித்திரவதை, கொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு ஆளான ஆயிரக்கணக்கானவர்களுக்கு நீதி வழங்குவதில் நேபாள அரசு தோல்வியடைந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் நேபாள அரசு பல்வேறு வாக்குறுதிகளை ஏற்கெனவே அளித்தது.
எனினும், உள்நாட்டுப் போரின்போது ராணுவத்தினரும், மாவோயிஸ்ட்களும் இழைத்த மனித உரிமை மீறல்கள் குறித்து அந்நாட்டு அரசு இதுவரை எந்த அர்த்தமுள்ள விசாரணையையும் நடத்தவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
÷லாமா கைது செய்யப்பட்டதை நேபாளத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றுள்ளன. இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், “”கொலை வழக்கில், முன்னாள் மாவோயிஸ்ட் எம்.பி. பாலகிருஷ்ண துங்கலுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறைவேற்றுவது உள்பட முக்கியமான விவகாரங்களில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம், மனித உரிமை மீறலில் ஈடுபட்டோரைத் தண்டிப்பதில் நேபாள அரசு தீவிரமாக இருக்கிறது என்பதை சர்வதேச சமூகத்துக்கு உறுதியளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.
நேபாள அரசு எதிர்ப்பு
இதனிடையே, ராணுவ அதிகாரி லாமா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, காத்மாண்டில் உள்ள பிரிட்டன் தூதரை நேபாள அரசு சம்மன் அனுப்பி வரவழைத்தது. லாமாவை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment